பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியொதுக்கீடு – 8 தமிழ் எம்.பிக்கள் மட்டும் எதி்ர்ப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 68 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 142 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதம் இடம்பெற்றது.

விவாத முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீது வாக்கெடுப்பைக் கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 68 மேலதிக வாக்குகளினால் ஒதுக்கீடு நிறை வேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அரச தரப்பினர் வாக்களித்திருந்த நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன், ஆகியோர் வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும்,மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.