புருஜோத்தமன் தங்கமயிலால் எழுதப்பட்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை
–
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில், அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக இணைந்து வந்தால், பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். இதன்மூலம், தமிழ்க் கட்சிகளை நோக்கி, பேச்சுவார்த்தை என்கிற பந்தை, ரணில் உதைத்திருக்கின்றார்.
இந்தப் பந்தை தமிழ்க் கட்சிகள் தங்களுக்கிடையில் எப்படி வெற்றிகரமாக கையாண்டு, ரணிலுக்கு எதிராக க ோலாக மாற்றப் போகின்றன என்பதுதான் இப்போதிருக்கும் கேள்வி.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதை, தென்இலங்கையின் ஆட்சித் தரப்புகள் எப்போதும் விரும்புவதில்லை. ‘ஒரே இலங்கை; ஒரே ஆட்சி; பௌத்தத்துக்கு முதலிடம்’ என்பனதான், தென்இலங்கையின் ஒற்றை நிலைப்பாடு. இதைக் கேள்விக்குள்ளாக்கும் எந்த முன்முயற்சிகளையும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட நினைப்பார்கள்.
சர்வதேச ரீதியில் இலங்கை மீது பாரிய அழுத்தங்கள் ஏற்பட்டாலன்றி, உள்ளக இன முரண்பாடுகள் குறித்தோ, தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் குறித்தோ, தென் இலங்கை ஆட்சியாளர்கள் சிந்திக்கத் தலைப்பட்டதில்லை.
சர்வதேச அழுத்தம் அல்லது போர் முனையில் பின்னடைவு ஏற்பட்ட தருணங்களில், சமாதானப் பேச்சு என்கிற உத்தியைப் பயன்படுத்தி, நெருக்கடிகளில் இருந்து ஆட்சியாளர்கள் தப்பித்திருக்கிறார்கள். மற்றப்படி, தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றிய பேச்சுகள் எழுவதைக்கூட, அவர்கள் விரும்புவதில்லை.
இதற்கு தென்இலங்கையை ஆண்ட எந்தவோர் அரசியல் தலைவரும் விதிவிலக்கில்லை. டீ.எஸ் சேனநாயக்கா தொடங்கி இன்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க வரையில் இதுதான் நிலைமை.
இப்படியான நிலைமையில், தமிழ்க் கட்சிகள் எல்லாமும் இணைந்து ஒன்றாக வந்தால், அரசாங்கம் பேச்சுக்கு தயார் என்பது, இலகுவாகத் தப்பிக்கும் ரணிலின் உத்தியாகும். இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடித்திருக்கின்ற பந்தானது, தமிழ்ககட்சிகள் என்கிற பொதுப் பரப்பை நோக்கி அடிக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்பட்டாலும், அது உண்மையில், தமிழ்த் தேசிய கட்சிகளை நோக்கி அடிக்கப்பட்ட பந்தாகும்.
ஆட்சியில் பங்கெடுத்திருக்கின்ற டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியோ, சிவநேசதுரை சந்திரகாந்தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளோ அரசாங்கத் தரப்பில் இருக்கக் கூடியவை. இவை, அரசியல் தீர்வு தொடர்பில் அக்கறை கொண்ட தரப்புகள் அல்ல. இந்தக் கட்சிகளின் அதிகபட்ச இலக்கு, பிரதேச அபிவிருத்தி என்பதுதான். அதற்கு ஆட்சியில் பங்காளியாக இருக்க வேண்டுமென்பது, இவர்களின் அரசியல் சித்தாந்தம்.
ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் என்பது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்கிற ஒற்றைப் புள்ளியைச் சார்ந்திருப்பது. அதுதான் அடிப்படை. அந்த அடிப்படைக்கு அப்பால் நின்று சிந்திக்க முடியாது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியோ எதுவாக இருந்தாலும், அரசியல் தீர்வு பற்றி சிந்தித்து செயலாற்றியாக வேண்டும். ஆனால், இந்தக் கட்சிகள் எல்லாமும் ஒன்றுக்கொன்று, நேரெதிரான செயற்பாட்டு நிலைகளைப் பேணுபவையாகக் காணப்படுகின்றன.
குறிப்பாக, கூட்டமைப்பு மக்களை காட்டிக் கொடுப்பதாக கூறிக் கொண்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி களம் கண்டது. அதுபோல, கூட்டமைப்பை எதிர்த்து விக்னேஸ்வரன் களம் கண்ட போது, ஒரு கட்டத்தில் அவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரித்தது. அடுத்த சில மாதங்களில், முன்னணியும் விக்னேஸ்வரனும் முட்டிக்கொண்டு, தனித்தனியாகக் களம் கண்டன.
அது மாத்திரமன்றி, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளேயே, மூன்று பங்காளிக் கட்சிகளும் முரண்பாடுகளின் உச்சத்தின் நின்று மோதிக் கொள்கின்றன. இப்படியான நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள், அதன் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று ஒவ்வொரு தரப்பும், நவக்கிரகங்கள் போன்று முகங்களை எதிர்த்திசையில் திருப்பிக் கொண்டிருக்கின்றன.
அரசியல் தீர்வு குறித்து பேச்சு நடத்த, கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்தாலே, டெலோவும் புளொட்டும் வருவதில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவரே, “சம்பந்தனின் அழைப்பை கருத்தில் எடுக்கத் தேவையில்லை; யாரும் பேச்சுக்கு வர வேண்டாம்” என்று பங்காளிக கட்சிகளிடம் அறிவிக்கின்றார்.
அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கூட்டமைப்புடன் இணைந்து, பேச்சு மேசைக்கு கொண்டுவந்து சேர்ப்பது என்பது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காரியம்.
அடிப்படையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களாக இருக்கின்றவர்கள், தங்களை முன்னிறுத்துவதைத் தாண்டி, எதையும் செய்வதற்குத் தயாராக இருப்பதில்லை. இவர்களைத் தாண்டி, கட்சிகளைத் தாண்டி, தமிழ் மக்களுக்கான தீர்வு, அவசியமும் அவசரமுமானது என்பதுதான் நிலைமை.
ஆனால், தன்னால் முடியாது என்றால், மற்றவர்களாலும் எந்த அதிசயமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற மனநிலை, தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களாக இருக்கின்றவர்கள் அனைவரிடத்திலும் வந்துவிட்டது.
ஒன்றாகக் கூடி, ஒன்றாக முடிவெடுத்து, மக்களிடம் அறிவித்துவிட்டு, அந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக, தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி இயங்கும் அரசியல்வாதிகளை, எந்தவொரு தரப்பினாலும் திருத்திவிட முடியாது. அவர்களைத் தேர்தல் என்கிற புள்ளியில் வைத்து, மக்கள் தோற்கடித்து வெளியேற்றினால் அன்றி, இவர்களை நேர்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.
அரசியல் ஆர்வலர்கள், கட்சி அபிமானிகள், புத்திஜீவிகள் தொடங்கி யார் யாரோவெல்லாம், “தமிழர் நலனை முன்னிறுத்திய நிலைப்பாடுகளுக்கு ஒன்றிணைந்து வாருங்கள்” என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி விட்டார்கள்.
ஆனால், அவற்றையெல்லாம் இந்த அரசியல் தலைவர்கள் ஒருபோதும் கேட்டுக் கொண்டதில்லை. விமர்சனங்களை அவர்கள் தனிப்பட்ட ரீதியில் எடுத்துக்கொள்வதோடு, விடயத்தை கடந்துவிடுகிறார்கள்.
எம்.ஏ சுமந்திரனோ, சி.வி விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ பாராளுமன்றத்துக்குள் இனி, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுகளை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று அழைக்க முடியாது. ஏனெனில், அதற்கான பதிலை ஏற்கெனவே ரணில் வழங்கிவிட்டார்.
பாராளுமன்றத்துக்குள், ஹன்சாட்டில் பதியப்படும் உரைகளை மாத்திரம் நிகழ்த்துவதோடு பணி முடிந்துவிட்டதாக, தமிழ்க் கட்சிகளின் தலைவர்களோ முக்கியஸ்தர்களோ விலக முடியாது. ரணில் இப்போது அடித்திருக்கின்ற பந்து கூட்டமைப்பையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையோ அல்லது இன்னொரு தமிழ்த் தேசிய கட்சியையோ நோக்கித் தனித்து அடிக்கப்பட்டதில்லை. மாறாக, அனைவரையும் நோக்கி அடிக்கப்பட்டு இருக்கின்றது.
இதனை, யாரும் தனித்துக் கையாளவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது. அப்படி நடந்து கொண்டுவிட்டு, மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நின்று, அரசியல் தீர்வு தொடர்பில் நீண்ட உணர்ச்சிபூர்வ உரைகளை நிகழ்த்த முடியாது. அதனால், பலனும் இல்லை.
அப்படியான நிலையில், ரணிலின் பந்தை அனைத்து தமிழ்க் கட்சிகளும் தலைவர்களும் தங்களுக்கிடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு, காழ்ப்பு மனப்பான்மைகளைக் கடந்து நின்று கையாள வேண்டும். அதன்மூலமே ரணிலின் தந்திரத்தை கடக்க முடியும்.
தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றும் இப்போது தனி நாட்டுக்கோரிக்கையோடு இல்லை. தேர்தல் மேடைகளில் கூட, சமஷ்டி தீர்வு என்ற நிலையைத் தாண்டி அவர்கள் பேசுவதில்லை.
வேறு விடயங்களில் அதீத உணர்ச்சிவசப்பட்ட உரைகளை நிகழ்த்தினாலும், தீர்வு விடயத்தில் சமஷ்டி என்ற புள்ளியை தாண்டுவதில்லை. அப்படியான நிலையில், தங்களுக்கு இடையில் சமஷ்டித் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி, எழுத்து வடிவிலான இணக்கத்தை தமிழ்க் கட்சிகள் காணுவதற்கு முயல வேண்டும்.
அதன்போது, சந்தர்ப்பங்களைக் கையாளும் உத்தி, இராஜதந்திர நோக்கு பற்றியெல்லாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அதன்மூலம், தேர்தல்களில் மோதிக் கொண்டாலும், தமிழ்த் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களின் வாக்குகளைக் பெற்ற கட்சிகளாக அவை நடத்து கொள்ள வேண்டும்.
அதுதான், ரணிலுக்கு எதிராக கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முதற்படி. அது நிகழவில்லை என்றால், தீர்வு குறித்த அதிசயம் நிகழ்வதற்கான வாய்ப்புகளை, முளையிலேயே கிள்ளுவது போன்றதாகும்.