நாட்டில் தற்போது காணப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக இருந்தால், அதற்கான அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எட்டப்பட வேண்டும். அவ்வாறான தீர்வினை வழங்குவது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தார்.
தற்போது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விரைவான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவை வெற்றி பெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற தீர்வை ஏற்கப்போவதில்லை என்பது உறுதியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உட்பட சர்வகட்சிகளுடன் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தொடர்ச்சியாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட இதர விவகாரங்கள் தொடர்பில் விரைவானதொரு நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது. இந்த முயற்சி வெற்றிபெறுமா, இல்லையா என்பது குறித்து உறுதியான, நம்பிக்கையான கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது.
இருப்பினும், எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்குரிய சந்தர்ப்பமொன்று கிட்டியுள்ளது. அவ்விதமாக கிட்டியுள்ள சந்தர்ப்பத்தினை நாங்களாக புறமொதுக்கியதாக இருக்க முடியாது. ஆகவே, தற்போதைய விரைந்த முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு எம்மால் இயலுமான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளோம்.
அதேநேரம் தற்போது நாட்டில் காணப்படுகின்ற நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால், அவற்றுக்கு அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்குரிய நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுத்தப்பட்டால் தான், நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்து சூழல்களிலும் மாற்றங்கள் நிகழும். சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி முகவரங்கள் உதவிகளை வழங்கும்.
சர்வதேச நாடுகள் கடன் மறுசீரமைப்புக்களை செய்யும். ஆகவே தான் ஆட்சியில் உள்ள அரசாங்கம் தீர்வு விடயத்தில் கரிசனை கொண்டுள்ளது.
அந்த வகையில், ஆட்சியில் உள்ள அரசாங்கம் நியாயமான தீர்வினை வழங்குவதற்கான கடப்பாட்டை கொண்டிருக்கின்றது. எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் அந்த தீர்வு அமைய வேண்டும். மீளப்பெற முடியாத வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்ற வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அக்கருமங்கள் பிரிக்க முடியாத, பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
எம்மை பொறுத்தவரையில், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற எந்தவொரு தீர்வினையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்றார்.