உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக தேர்தலுக்கு நிதி வழங்குவது கடினமாகும் என நிதி அமைச்சின் செயலாளர் கூறியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் எடுத்த நிர்வாக தீர்மானத்தையும் நிதி அமைச்சின் செயலாளர் ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று முற்பகல் அறிவித்தது.
எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு குறித்த தினங்களில் இடம்பெறாது என்றும், அதற்கான தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு போதிய நிதி வழங்கப்படாத காரணத்தினால் தமது நிறுவனத்தினால் அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்திருந்த நிலையில், நிதி அமைச்சின் செயலாளரினால் இன்றைய தினம் இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.