நீண்ட போராட்டத்திற்கு எங்களைத் தயார்ப்படுத்தாமல் விட்டால் இவ்வளவு காலமும் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்ததாகிப் போய்விடும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற சிவகுமாரின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1974 ம் ஆண்டு தமிழாராட்சி மாநாட்டில் பல பேர் கெல்லப்பட்டமைக்கு காரணமாயிருந்த பொலிஸ் பொறுப்பதிகாரியை பழி தீர்க்க வேண்டுமென சிவகுமாரன் உட்பட்டோரால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் பல கட்டங்களைக் கண்டு ஆயுதப் போராட்டமாக 2009 வரை நீடித்தது.
24 வயதில் தனது உயிரை ஈழ விடுதலைக்காக ஈந்த பொழுது நாங்கள் மாணவனாக இருந்தோம். பொன் சிவகுமாரனின் இறுதியஞ்சலியில் கலந்து கொண்டது. இன்றும் பசுமையாக ஞாபகத்தில் இருக்கின்றது.
அவருக்கும் எனக்கும் 7 வயது இடைவெளி காணப்படும் வேளை இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் 73 வயதை அடைந்திருப்பார்.
வருகின்ற வருடம் அவர் இறந்து 50 வது வருடத்தைக் கொண்டாடவுள்ள நிலையில் ஈழ விடுதலைக்காக அவர் ஆரம்பித்து வைத்த யுத்தம் 2009 வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் , போராளிகள் எனக் கொலை செய்யப்பட்டாலும் இன்றும் நாங்கள் இராணுவ அடக்குமுறைக்குளிருக்கும் துப்பாக்கிய சூழ்நிலைக்குள் தான் இருக்கின்றோம்.
இன்றைய நிலையில் வடகிழக்கு முழுவதும் சி்ங்கள பௌத்த மேலாதி்கத்தை நிறுவுவதற்கான போக்கையே காண முடிகின்றது. ஆகவே நாங்கள் பல தூரம் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
நீண்ட போராட்டத்திற்கு எங்களைத் தயார்ப்படுத்தாமல் விட்டால் இவளவு காலமும் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்ததாகிப் போய்விடும்.
இன்று இலங்கை பொலிஸ் , இராணுவம் உட்பட உயர் மட்டத்திலுள்ளோர் தமிழ் மக்களை குத்திக் குதறப்பட வேண்டிய இனமாகத்தான் பார்க்கின்றார்கள்.அன்று பாராளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம் , யோகேஸ்வரன் தாக்கப்பட்டதைப் போன்று இன்று தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.
அந்த வகையில் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுத்து சுயாட்ச பிரதேசத்தில் தமது பிரச்சினைகளை கௌரவமாக வன்றெடுக்கக்கூடியநிலைக்கு மாற்றப்பட வேண்டுமாயின் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டு செயற்படத் தவறும் பட்சத்தில் தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைக்கின்றோம் என்பதே கருத்தாகும் எனக் குறிப்பிட்டார்.