பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகன தணிக்கையின்போது காரை நிறுத்தாமல் சென்ற , நஹெல் என்ற 17 வயதே ஆன ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பாரிஸ் நகரின் நான்டெர் புறநகர்ப் பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். புதன்கிழமை இரவு சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காரை காவல்துறையினர் நிறுத்த உத்தரவிட்டும் அது நிறுத்தப்படாததால் காவல்துறையினர் அதனை விரட்டி சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் காரில் இருந்த ஆப்பிரிக்க சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அச்சிறுவன் உயிரிழந்தார்.
இது பாரிஸ் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. பாரிஸ் இன ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட பகுதியாக அறியப்படுகிறது. இங்கே பல்வேறு இனத்தவர், கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் கருப்பின இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.அத்தோடு வன்முறையும் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள அதிபர் இமானுவேல் மேக்ரான், “இது மன்னிக்கமுடியாத குற்றம். சட்டம் தனது கடமையைச் செய்யத் தொடங்கிவிட்டதால் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.