அமைச்சரவை மாற்றத்தில் மகிழ்ச்சியில்லை‌ : பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) அமைச்சரவையில் மாற்றம் செய்தார்.

03 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எவ்வாறாயினும், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவலையடைந்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தீர்மானம் ஜனாதிபதி எடுத்த தவறான முடிவாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை வழிநடத்தும் பலத்தை பாராளுமன்றத்தின் தலைவருக்கு வழங்குகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஆற்றலை வழங்குகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஐந்து பேர் மாத்திரமே உள்ளனர். ஆனால் இங்கிருந்து ஒரு அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அரச அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அது தவறு. தவறை தவறு என்று சொல்ல நாங்கள் பயப்படுவதில்லை. ஜனாதிபதி கூட தவறு செய்தால் தவறுதான்.

இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டனர்.

மேலும், தற்போது நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவை, அரச பெருந்தோட்ட முயற்சியாண்மை மறுசீரமைப்பு அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் ஜனாதிபதி நியமித்தார்.