தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழு சூழ்ச்சிகரமாக செயற்படுவது தெளிவாக விளங்குகிறது. தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓடி வந்து நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (02) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு விரைவாக வந்து பதிலளித்து விட்டு,மீண்டும் விரைவாக சபையை விட்டுச் செல்கிறார்.2023 ஆம் ஆண்டு 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
2023 ஆம் ஆண்டு 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் வேட்பு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இம்மாதத்துக்குள் வெளியிட வேண்டும். தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பினால் இந்த அதிகாரம் உரித்துடையாக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரின் ஆலோசனை கோரியுள்ளதை அறிய முடிகிறது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகாரம் உள்ளது,ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனையை கோருவது பயனற்றது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கோரலுக்கான வர்த்தமானி அறிவித்தலை எந்நேரமும் வெளியிட முடியும்.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழு சூழ்ச்சிகரமாக செயற்படுவது தெளிவாக விளங்குகிறது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு,ஆனால் ஆணைக்குழு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றமை ஏதோவொரு சூழ்ச்சி இடம்பெறுவதை நன்கு அறிய முடிகிறது.ஆகவே ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு விரைவாக வருகை தந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதைப் போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதையும் ஓடி வந்து குறிப்பிட வேண்டும்.
தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் சமிஞ்சையை எதிர்பார்த்த நிலையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது.ஆகவே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா எவ்வாறு செயற்பட்டார்,யாருக்காக செயற்பட்டார்,எவரது அரசாங்கத்தில் எந்த பதவி வகித்தார் என்பதை நன்கு அறிவோம்.அவர் சுயாதீன நபர் அல்ல,அரசியல் ரீதியில் இவர் தொடர்புப்பட்டார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனையை கோருவது அவசியமற்றது.அத்தடன் சட்டமாதிபரின் ஆலோசனையை நாட்டு மக்களுக்கு குறிப்பிடப் போவதில்லை எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே தேசிய தேர்தல் ஆணைக்குழு அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.