மடியில் கனம் இருப்பதால் பிதற்றுகிறார் கமால் குணரட்ன – சபா குகதாஸ்

மடியில் கனம் இருப்பதால்  கமால் குணரட்ன பிதற்றுகிறார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

தற்போதைய பாதுகாப்பு செயலரும் இறுதிப் போரின் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஓய்வு நிலை இராணுவத் தளபதியும் ஆன கமால் குணரட்ன ஊடக அறிக்கையில் எதற்கு எடுத்தாலும் தமிழ் அரசியல்வாதிகள் சிறுபிள்ளைத் தனமாக சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கிறார்கள் என பிதட்டியுள்ளார்.

கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் நடந்தால் இறுதிப் போரில் முக்கிய தளபதியாக வன்னிப் போர்க்களத்தில் நின்ற கமால் குணரட்ன மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தினால் உளற ஆரம்பித்துள்ளார்

தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அரச படைகளினாலும் ஆட்சியாளர்களினாலும் மேற் கொள்ளப்பட்ட மேற் கொள்ளப்படுகின்ற அநீதிக்கு ஆட்சியாளர்களினால் நீதி கிடைத்த வரலாறு இருக்கிறதா? நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பை மதித்து நடந்த சந்தர்ப்பம் உண்டா? உண்மையை கண்டறியும் ஆணைக்குழுக்களின் மூலம் நீதி கிடைத்ததா ? இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள் நாட்டில் நீதி கிடைக்கும் என நம்ப தயார் இல்லை முழுமையான நம்பிக்கையை இழந்த பின்னர் சர்வதேச நீதியை கோரி உள்ளனர்.

இறுதிப் போரில் அரச படைகள் மேற் கொண்ட யுத்தக் குற்றங்கள் இனப்படுகொலைகள் யாவற்றுக்கும் பக்கச் சார்ப்ற்ற விசாரணை நடப்பதாக இருந்தால் கமால் குணரட்ன உற்பட்ட குழுவினர் போர்க்குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளதால் பிதட்டுகிறார் பாதுகாப்பு செயலாளர்.

ஏப்பிரல் 21 படுகொலைக்கு கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் கதவினை தட்டினார் என்பதை குறுகிய காலத்தில் கமால் மறந்து விட்டாரா? கர்தினால் உள் நாட்டில் நீதி கிடைக்காமையால் தான் சர்வதேசத்தின் கதவுகளை திறந்து நீதியை பெற்றுத் தருமாறு கேட்டார் என்பதை உலகமே அறியும் கமாலின் கருத்தை பார்த்தால் கர்தினாலும் சிறுபிள்ளைத் தனமாகவா நடக்கிறார்? இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.