சீனாவைப் பொருத்த வரையில் இலங்கையிலே ஒரு பொது நல நோக்கோடு அவர்களின் செயற்பாடுகள் இடம் பெறுவது இல்லை. மாறாக தங்களுடைய இலாபத்தை கருத்தில் கொண்டே சீனா செயற்படுகின்றது எனவும் வடக்கிலோ கிழக்கிலோ சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க கூடாது எனவும் அதை நாங்கள் எதிர்போம் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு இன்று வெள்ளிக்கிழமை (10) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
இலங்கையிலே அபிவிருத்தி என்ற போர்வையிலே சீனாவினால் வீதிகள் போடப்பட்டது. ஆனால் வட்டி வீதம் கூடிய நிலையிலேயே தன்னுடைய இலாபம் கருதியே இலங்கை அரசாங்கத்திற்கு சீன அரசாங்கம் இந்த வேலைகளை செய்து கொடுத்தது.
அதேபோல் போர்ட் சிட்டியும் சீனா தனக்கான ஒரு பிராந்திய இடமாக போர்ட் சிட்டியை வைத்துக் கொண்டது. அதேநேரம் துறைமுகத்தின் ஒரு பகுதி சீனாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை விமான நிலையம் அம்பாந்தோட்டை துறைமுகம் இப்படியாக ஒட்டுமொத்த இலங்கையின் வருமானத்தின் முக்காவாசி பங்கை வட்டி விகிதமாக கட்டுவதற்கான நிலைமையை சீனா உருவாக்கியுள்ளது.
அதனால் தான் இப்போது பொருளாதார ரீதியாக நாங்கள் மீள முடியாத நிலையில் இருக்கிறோம். இப்பொழுது சீனா மீண்டும் வடக்குக் கிழக்கிலே குறிப்பாக வடக்கை தன்னகத்தே கொண்டு வருவதற்கான நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுகின்றது.
எப்படி என்று சொன்னால் இங்கே தன்னுடைய லாபம் கருதி எண்ணெய் விடயங்களை கையாள முடியுமோ அதை கையாளுகின்ற வகையிலே இன்று பல விடயங்களை செயற்படுத்தி வருகின்றது. சீனாவினுடைய தூதுவர் வடக்கிலே பல இடங்களுக்கு விஜயம் செய்து உணவுப்பொதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றர். அதேநேரம் மீனவர்களுக்கு மீன் வலைகளையும் வழங்குகின்றார்.
ஆகவே சீனா நினைப்பது என்ன வென்றால் மீனவர்களை தன்னகத்தே கொண்டு வந்தால் வடக்கில் உள்ள கரையோர பகுதிகளில் தன்னுடைய இலாபம் கருதி அட்டைப்பண்ணை உட்பட ஏனைய விடயங்களை மேற்கொண்டு வடக்கில் உள்ள முழுமையான நிலங்களையும் அபகரிக்கின்ற நிலையையும் காணக்கூடியதாக உள்ளது.
எங்களுடைய பிரதேசத்தை மையமாக கொண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்ற போது எங்களுடைய பிரதேசம் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்படும்.
இந்தியாவுக்கும் எங்களுக்கும் மீனவர்கள் சம்பந்தமாக பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவை விட்டு நாங்கள் வேறு நாட்டின் பக்கம் நிற்கின்ற வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கிறது.
ஏனென்றால் எங்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியா தான் முன்னுக்கு வருகின்ற ஒரு சூழல் இருக்கின்றது.
அந்த வகையிலே நாங்கள் இந்தியாவை பகைத்துக் கொண்டு அல்லது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள் முரண்பாடுகள் காரணமாக வடக்குக் கிழக்கிலே பாதிப்பு ஏற்படுகின்ற சூழலை அனுமதிக்க முடியாது.
ஆகவே இந்த விடயத்திலே சீனா தூதுவரின் வருகை வடக்கிலே எங்களுடைய மீனவ பகுதிகளில் இருக்கின்ற செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்காகவே எனவே அதற்கு அனுமதி வழங்க முடியாது என்பது என்னுடைய கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.