அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் – இலங்கை முதலீட்டுச் சபை இடையேயான ஒப்பந்தம் இரத்து

ஏற்றுமதி சந்தைக்காக மாத்திரம் நாளொன்றுக்க 420,000 பரல்கள் கொள்ளவுடன் கூடிய பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையமொன்றை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிறுவுவதற்காக இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு தனியார் நிறுவனத்துக்கிடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக 2019.09.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 50 வருட நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் 1,200 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உத்தேச கருத்திட்ட மூலம் குறித்த காணி குத்தகை அடிப்படையில் பெறப்படாமையால், இதுவரை கருத்திட்ட அமுல்படுத்தப்படவில்லை.

கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் பற்றி கருத்திட்ட முன்மொழிவாளருக்கு பலதடவைகள் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருப்பினும், அதற்குப் பதிலளிக்கவில்லை. இருதரப்பினர்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய கருத்திட்ட முன்மொழிவாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையால், குறித்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.