இதுவே இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு இருக்கும் கால எல்லை – ஜெகான் பெரேரா

பெருமளவு தாமதத்துக்கு பிறகு, இறுதியில் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி தேர்தல்கள் மார்ச் 9 நடத்தப்படும் என்று தீர்மானித்திருக்கிறது. இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம், ஏற்கெனவே ஒரு வருடத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. ஒரு வருடத்துக்கும் அப்பால் தேர்தல்களை ஒத்திவைத்தால், அது சட்டவிரோதமான ஆட்சிமுறை சிக்கலுக்குள் நாட்டை தள்ளிவிடும் என்பதுடன் அதன் விளைவாக சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கும்.

நாடு இப்போது தேர்தல் திசை நோக்கி நகர்த்தப்படுகிறது. இது ஒன்றும் அரசாங்கத்தின் விருப்பம் அல்ல. தங்களது வெற்றிவாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கும் எதிர்க்கட்சிகளினதும் அவற்றின் வேட்பாளர்களினதும் தேர்தல்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதில் அக்கறைகொண்ட சிவில் சமூக தேர்தல் கண்காணிப்பு குழுக்களினதும் விருப்பமாகும்.

மக்களினால் தெரிவுசெய்யப்படும் பதவிகளை கைப்பற்றுவதற்கு அரசியல்வாதிகள் வாய்ப்புக்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக பாடுபடுகின்ற சிவில் சமூக அமைப்புக்களை பொறுத்தவரையில், அவை முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும், ஜனநாயக பொறிமுறைகள் தொடர்ந்து செயற்படுவதை உறுதிசெய்வதில் நாட்டம் கொண்டிருக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தல்களை மார்ச் 9 நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருக்கின்ற போதிலும், உண்மையில் அந்த நேரத்தில் அவை நடைபெறுமா என்ற சந்தேகம் தொடர்கிறது. தேர்தல்களை நடத்துவதற்கு திறைசேரியில் பணமில்லை என்று அரசாங்க பேச்சாளர்கள் கூறுகிறார்கள். இதை அரசாங்கம் உயர் நீதிமன்றத்திலும் கூறியிருக்கிறது.

பொருளாதாரம் மீட்சி பெறும் வரை நாட்டுக்கு அரசியல் உறுதிப்பாடு தேவைப்படுகிறது என்று ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் வேறு பேச்சாளர்கள் வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புதுமையான வாதமும் முன்வைக்கப்படுகிறது. அதாவது தேர்தல் திகதி குறித்த தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு எடுத்தபோது அதன் ஐந்து உறுப்பினர்களில் இருவர் மாத்திரமே பிரசன்னமாகியிருந்ததால், அந்த தீர்மானம் கேள்விக்குரியதாகும். ஏனைய மூன்று உறுப்பினர்களும் மெய்நிகர் காட்சி வழியாக கூட்டத்தில் பங்கேற்றதாக ஆணைக்குழு பதிலளிக்க வேண்டியேற்பட்டது.

உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகள் வெற்றி பெறலாம் அல்லது வெற்றி பெறாமல் போகலாம். ஆனால், அது எவ்வாறு அமைந்தாலும், விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும். தேர்தல் ஆணைக்குழுவினால் திகதி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் கூட ஏதாவது வழியில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுமாக இருந்தால், அதை எதிரணி கட்சிகள் கடுமையாக எதிர்க்கும். அவை நிவாரணம் பெற நீதிமன்றங்களை நாடும். சிவில் சமூக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் இதில் இணைந்துகொள்ளும்.

அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிர்ப்பந்தங்களை கவனத்தில் எடுப்பதா அல்லது நேரடியாக சட்டத்தின் பிரயோகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்பதே நீதிமன்றம் எதிர்நோக்கக்கூடிய கேள்வியாக இருக்கும்.

அண்மைய வழக்குகளில் குறிப்பாக, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பெரிதும் விரும்பப்படுகின்ற ‘முறைமை மாற்றத்தை’ சட்ட முறைப்படியான வழிமுறைகளின் மூலம் கொண்டுவருவதற்கு நாட்டத்தை காட்டியிருக்கிறது.

போராட்ட இயக்கம்

தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கோரி வீதிப்போராட்டங்களில் இறங்கவேண்டும் என்று பெருமளவு நெருக்குதல்கள் அரசியல் கட்சிகள் மீது பிரயோகிக்கப்படுகின்றன. அவ்வாறு செய்வதற்கு எதிரணிக் கட்சிகள் துணிச்சல் கொள்ளலாம். ஏனென்றால், மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் தேர்தல் தோல்விக்கு அரசாங்கம் அஞ்சுகிறது என்று அவை ஒரு மதிப்பீட்டை செய்யக்கூடும். முறைகேடாக சொத்துக்களை குவித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறியிருக்கும் நிலையில், பொருளாதாரத்தை பாதுகாக்கவேண்டிய தேவை குறித்த அரசாங்கத்தின் கருத்தை பெருமளவுக்கு கவனத்தில் எடுக்கக்கூடிய நிலையில் மக்கள் இல்லை.

நேர்மைக்கேடான முறையில் வர்த்தகக் குழுக்கள் வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருக்கின்ற பணம் 53 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த தொகை இலங்கையின் கடன்களை தீர்க்கப் போதுமானவை.

கடுமையான வரிகளினாலும் பணவீக்கத்தினாலும் படுமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் இதனால் பெரும் ஆத்திரமடைந்திருக்கிறார்கள். அந்த பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இந்த கம்பனிகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை.

மக்களின் ஆதரவு மோசமாக குறைந்துபோயிருக்கும் பின்னணியில் போராட்ட இயக்கத்துக்கு எதிராக கடுமையான  நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கத்தின்  ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்.

மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத – ஜனநாயக தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதற்கு தயங்குகின்ற ஒரு அரசாங்கத்தின் சார்பில் நடவடிக்கைகளில் இறங்குவதனால் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் குறித்து பாதுகாப்புப் படைகளும் அக்கறை கொள்ளக்கூடும். மக்களின் ஒரு பகுதியான ஆயுதப்படைகள் அவர்களுக்காக அவர்களுடன் நிற்கவேண்டும் என்று உணரக்கூடும்.

சர்வதேச மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையின் இரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக கனடா அரசாங்கம் விதித்த தடைகள் பாதுகாப்பு படைகளுக்கு ஓர் எச்சரிக்கையாகும். அவர்கள் இருவருக்கும் நேர்ந்த கதி தங்களுக்கும் நேரலாம் என்று படையினர் உணரக்கூடும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் போராட்ட இயக்கத்தை எதிர்கொள்வதில் பாதுகாப்புப் படைகள் மிகுந்த கட்டுப்பாடான முறையில் நடந்துகொண்டதை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. தனது ஆணையை இழந்துவிட்டதாக தோன்றிய ஒரு ஜனாதிபதிக்கு ஆதரவாக மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்பட பாதுகாப்பு படைகள் விரும்பவில்லை.

மறுபுறத்தில், அரசாங்கம் தேர்தலை நடத்த விடுவதற்கு தீர்மானித்தால், அதன் அச்சங்களையும் நடைமுறையில் காண நேரிடலாம். பொருளாதாரத்தை இயக்க நிலைக்கு கொண்டுவருவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் இயலாமை அதன் தேர்தல் வாய்ப்புக்களுக்கு பாதகமாக அமையும்.

பொருளாதார உறுதிப்பாடு போன்ற ஒரு தோற்றப்பாட்டுக்கு மத்தியில் எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் இல்லாமலும், நீண்ட நேர மின்வெட்டு இல்லாமலும் இருக்கின்ற அதேவேளை பொருளாதாரம் அதிக பெரும்பான்மையான மக்களுக்கு சிறிய வருமானத்தையே கொடுக்கிறது. அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் 8 சதவீதத்தினால் சுருங்கிய அதேவேளை இவ்வருடம் 4 சதவீதத்தினால் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இன்னமும் கிட்டாத நிலையில் பொருளாதார வளர்ச்சி நோக்கங்களுக்கான சர்வதேச கடனுதவிகளை அரசாங்கத்தினால் பெறமுடியாமல் இருக்கிறது.

உறுதிமொழி

உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு குறிப்பிடத்தக்க ஒரு தோல்வி அல்லது முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும் நிலை கூட ஏற்பட்டால், அதன் நியாயப்பாடு மேலும் குறைந்துவிடும்.

தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு தீர்மானங்களை எடுப்பதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் ஆற்றலில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். 2020 ஒகஸ்ட் பொதுத்தேர்தலில் பெற்ற ஆணையை வைத்துக்கொண்டு தற்போது அரசாங்கம் பதவியில் இருப்பதற்கு நியாயப்பாடு இருப்பதாக உரிமம் கோரக்கூடியதாக இருக்கிறது. அந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்தான வெற்றி கிடைத்தது. இப்போது கூட 225 ஆசனங்களில் 134 ஆசனங்களை அது கொண்டிருக்கிறது.

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து விலகவைப்பதில் கடந்த வருடம் போராட்ட இயக்கம் கண்ட வெற்றி முன்னைய அந்த ஆணையின் நியாயப்பாட்டை வலுவிழக்கச் செய்துவிட்டது. அவருக்கு பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் மற்றும் இராணுவ பலத்தை மிகவும் சாதுரியமான முறையில் பிரயோகித்து போராட்ட இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதில் வெற்றி கண்டார். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு ஏற்படக்கூடிய ஒரு தோல்வி பயனுடைய முறையில் ஆட்சியை தொடருவதில் அரசாங்கத்தின் ஆற்றலை பலவீனப்படுத்திவிடும்.

உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுகின்றனவோ இல்லையோ, அடுத்தகட்ட போராட்ட இயக்கம் பிரதான அரசியல் எதிரணிக் கட்சிகளின் தலைமையிலேயே முன்னெடுக்கப்படும். அது ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தலைமைத்துவம் இல்லாமல் தன்னியல்பாக மூண்ட முதல் கட்ட போராட்டத்தை போன்று இருக்காது.

கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பதவி விலகியபோது போராட்ட இயக்கத்தினால் சொந்த தலைமைத்துவத்தின் மூலம் அதை பதிலீடு செய்யக்கூடியதாக இருக்கவில்லை.

ஆனால், இனிமேல் போராட்ட இயக்கத்துக்கு பிரதான எதிரணி கட்சிகளே தலைமைதாங்கி வழிநடத்தும். பொதுத்தேர்தலை நடத்தவேண்டும் என்பதே அவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கும்.

பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தில்  இரண்டரை வருடங்கள் நிறைவடைந்து, அதை எந்த நேரத்திலும் கலைக்கக்கூடிய அதிகாரத்தை ஜனாதிபதி பெறும் தருணத்துடன் சமாந்தரமானதாக அந்த கோரிக்கை அமையும். இத்தகைய சூழ்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக உறுதியளித்துவரும் அரசியல் சீர்திருத்தங்களை ஜனாதிபதி முன்னெடுப்பதற்கான கால எல்லை சுருங்கிப்போகும்.

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நீடித்து வருகின்ற சிக்கலான இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி இன மற்றும் மத சிறுபான்மையினங்கள் மத்தியில் குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் பெரும் நம்பிக்கையை தோற்றுவித்திருக்கிறது. ஜனாதிபதியும் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையான தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் பிரச்சினைகளை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எந்தவிதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படாமலும்  கூட பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்தல், பயங்கரவாதத்தை ரத்து செய்தல், சொத்துக்குரியவர்களின்  உரிமைகளை கருத்தில் எடுக்காமல் இராணுவத்தினாலும்  தொல்பொருளியல் திணைக்களத்தினாலும் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், கடந்த கால மனித உரிமை மீறல்களை விசாரணை செய்து மனக் காயங்களை குணப்படுத்துவதற்கான வழிவகைகளை முன்வைப்பதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைத்தல் என்பனவே அவையாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைத்தால் நாட்டில் தேசிய ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்கு குறுக்கே நிற்கும் தடைகளை அகற்றி, நோபல் சமாதானப் பரிசு கமிட்டியினால் பரிசீலிக்கப்படக்கூடிய முன்னுதாரணத்தை உலகுக்கு காட்டிய ஒரு தலைவராக இலங்கையின் வரலாற்றில் தனது முத்திரையை பதிக்கமுடியும்.