இந்தியா இல்லாமல் இலங்கைத் தமிழரின்  பிரச்சனையைத் தீர்க்க முடியாது – சிவசக்தி ஆனந்தன்

இந்தியா இல்லாமல் இலங்கைத் தமிழரின்  பிரச்சனையைத் தீர்க்க முடியாது” என வன்னியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்மநாபாவின் 33 ஆவது நினைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யுத்தம் முடிவடைந்து  14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதும் ,  போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கமுடியாத நிலையிலேயே  உள்ளன.

இதன்காரணமாக  ஒரு சில கட்சிகளைத் தவிர ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் மீண்டும் இந்தியாவை நாடி இருக்கும் நிலையே  ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 21 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்திக்கவுள்ள நிலையில் அவரது சந்திப்புக்கு  முன்னரே ”இலங்கை ஜனாதிபதி தமிழர் பிரச்சனையைத்  தீர்க்க அழுத்தம் கொடுக்கவேண்டும்” எனக் கோரி   தமிழ் கட்சிகள் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியப் பிரதமரும்  இச்சந்திப்பின் போது  ” மாகாணசபைக்குள்ள முழுமையான அதிகாரங்கள் வழங்குதல் , போரினால்  ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளான நில ஆக்கிரமிப்பு, பெளத்த மயமாக்கல் போன்ற பல பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தத்தை பிரயோகித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.