இராணுவத்தினருக்கு கொடுக்கும் மரியாதையை மலையக தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் – அருட்தந்தை மா.சத்திவேல்

போர்க்காலத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு கொடுக்கும் மரியாதையை, மலையக தொழிலாளர் வர்க்க உழைப்பு வீரர்களுக்கும் கொடுக்க வேண்டும் என மலையக மக்களின் மாண்பை பாதுகாக்கும் அமைப்பின் ஆலோசகரான அருட்தந்தை மா.சத்திவேல் இன்று வெள்ளிக்கிழமை (நவ 25) வெளியிட்ட தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிப்பதாவது,

பதுளை ஹாலிஎல மேற்பிரிவு தோட்ட மயான பூமி அகழ்வழிக்கப்பட்டமையானது மனித நாகரிக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. அது சட்டத்துக்கு முரணானதாகும்.

அத்தோடு புதைக்கப்பட்டவர்களையும் அவர்களின் உறவுகளையும் மட்டுமல்ல, மலையக மக்கள் சமூகத்தையே அவமதிக்கும் செயல் என்பதால் இதனை வன்மையாக கண்டிப்பதோடு, முறையான விசாரணை நடத்தப்பட்டு, காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதோடு, புதைக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் மன்னிப்பு கோரி, மயானம் பாதுகாக்கப்படல் வேண்டும் என மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பு வேண்டுகோள் விடுப்பதோடு, இனியும் இவ்வாறு நடக்க தோட்ட கம்பெனிகள் இடமளிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறது.

பொதுவாக புதைகுழிகள் அகற்றப்பட வேண்டுமாயின், அது தொடர்பில் நீதிமன்றில் முன் அனுமதி பெற்று புதைக்கப்பட்டவர்களின் எச்சங்கள் உரிய மரியாதையுடன் வேறிடமொன்றில் முறையாக புதைக்கப்பட்டதன் பின்னரே மயான பூமி வேறு தேவைக்காக பயன்படுத்தப்படலாம்.

இவ்வாறான முன் அனுமதியினை பதுளை ஹாலிஎல மேற்பரப்பு தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொண்டதா? இல்லையாயின், ஏன்?

மலையக மக்கள் எதிர்வரும் 2023ஆம் ஆண்டில் இந்நாட்டில் தமது 200 வருட வரலாற்று வாழ்வை பெருமையுடன் நினைவுகூரவுள்ள நிலையில் மயான பூமி அழிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் இந்நாட்டின் பிரஜைகள் அல்லர் என கூறுவதாகவே உள்ளது. இதுவே பேரினவாதம். இதுவே இன அழிப்பு.

மலையக மக்கள் மலையகத்தை நோக்கி ஆரம்ப காலங்களில் நடந்தே அழைத்து வரப்பட்டபோது வழியில் நோயின் காரணமாக கைவிடப்பட்டு இறந்தவர்கள் மிருகங்களின் உணவானதுண்டு. அத்தோடு சிலர் மிருகங்களின் தாக்கத்தாலும் கொல்லப்பட்டுள்ளனர். கடல் சீற்றத்தினால் மரணித்துள்ளனர்.

மலைப்பாங்கான பிரதேசத்தை உற்பத்தி பயிர் நிலங்களாக மாற்றும்போது நிலவிய காலநிலை மற்றும் வனவிலங்குகளின் தாக்கம் காரணமாக 1841ஆம் ஆண்டு வரை 70 ஆயிரம் பேரும், 1841 -1849 இடைப்பட்ட காலப்பகுதியில் 90 ஆயிரம் பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இக்காலகட்டத்தை தொடர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக நூற்றுக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். எனினும், உயிரிழந்த இவர்களுக்கு கல்லறைகளோ மயான பூமிகளோ கிடையாது.

இவ்வாறு மறைந்தவர்களை கௌரவிக்கவுள்ள இக்கால சூழ்நிலையில் ஹாலிஎல தோட்ட சம்பவம் மிகுந்த மன வேதனையளிக்கிறது.

வடகிழக்கு எங்கும் விடுதலைப்புலிகளின் காலத்தில் உரிய மரியாதையுடன் பாதுகாத்துவந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த ஆட்சியாளர்களால் முழுமையாக அழிக்கப்பட்ட போதும், வடகிழக்கு தமிழர்கள் அவர்களின் நினைவிடங்களில் வருடந்தோறும் உணர்வுபூர்வமாக விளக்கேற்றி நினைவேந்தல் நடத்துகின்றனர்.

இத்தகைய நினைவேந்தல் தியான வாரத்திலேயே ஹாலிஎல மேற்பிரிவில் மயானம் அழிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களும் உழைப்பு வீரர்களே. அவர்களது மயானங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் மேற்படி தோட்ட நிர்வாகம் மயானத்தை அழிக்கும் செயற்பாட்டினை உடன் நிறுத்தி நீதிமன்றில் முன் அனுமதி பெற்றிட வேண்டும்.

புதைக்கப்பட்டவர்களில் அடையாளம் தெரிந்தோரின் எச்சங்கள் உரிய கௌரவமளிக்கப்பட்டு வேறிடங்களில் புதைக்கப்படுவதோடு அடையாளம் தெரியாதோரின் எச்சங்கள் தனியாக பொது இடத்தில் புதைக்கப்படவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தோட்ட கம்பெனிகள் அனைத்து தோட்டங்களிலும் இறந்தவர்களை புதைப்பதற்கான தனியான இடத்தினை ஒதுக்கி, தோட்ட நிர்வாகமே அதனை பராமரிக்கவும் வேண்டும்.

அங்கு புதைக்கப்பட்டவர்களும் புதைக்கப்படுபவர்களும் தோட்டங்களில் வியர்வை சிந்தி உழைத்தவர்கள் மட்டுமல்ல, நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித் தந்து, நாட்டை பாதுகாக்கும் தொழில் வீரர்கள்.

போர்க்காலத்தில் இறந்த இராணுவத்தினருக்கு கொடுக்கும் மரியாதை இத்தொழிலாளர் வர்க்க உழைப்பு வீரர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.