இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஜெய்கா தலைவர் பாராட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனக்கா அகிஹிக்கோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமான செயலாக இருந்தாலும் இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை கலாநிதி தனக்கா அகிஹிக்கோ பாராட்டினார்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டம், இலகு ரயில் திட்டம் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட ஜப்பானிய உதவியின் கீழ் இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு தெரிவித்தார்.

கடந்த கால பொருளாதார நெருக்கடியின்போது, இலங்கைக்கு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்காக ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜெய்காவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜெய்கா தயாராக இருப்பதாக கலாநிதி அகிஹிட்டோ மேலும் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் விவகார பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.