ஈழத்தமிழர் பிரச்சினையை விரைந்து தீர்த்து வைக்கவேண்டும்- நல்லை ஆதீன முதல்வர், ஆறுதிருமுருகன் வேண்டுகோள்

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் தீர்த்து வைக்கவேண்டும் என யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை அமைச்சர் எல்.முருகனிடமும் பா.ஜ.கவின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலையிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நல்லை ஆதீன முதல்வரும் செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகனும் தெரிவித்தனர்.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சரிய குருவையும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் கலாநிதி ஆறுதிருமுருகனையும், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இந்திய தகவல் ஒலிபரப்பு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.கவின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலையும் இன்று (11) சனிக்கிழமை நல்லை ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக நல்லை ஆதீன முதல்வரும் ஆறுதிருமுருகனும் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

இலங்கையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதுதான் சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய அரசாங்கங்கள் காலத்துக்குக் காலம் பல முயற்சிகள் எடுத்துள்ளன. அந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிவடைந்துள்ளன.

இந்தக் காலத்தை முறையாக பயன்படுத்தி இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவேண்டும்.

தமிழ் மக்கள் அனைத்து உரிமையுடன் வாழ்வதற்கு ஒரு தீர்வினை கண்டு, அதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்கவேண்டும்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலாசார நிலையம் யாழ்ப்பாண மக்களுக்குரியது. யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தை வளர்ப்பதற்கு யாழ் மக்களிடம் தான் அதனை ஒப்படைக்க வேண்டும்.

திருகோணேஸ்வரத்தின் புனிதத் தன்மையை பாதுகாப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தனர்.