தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுதிமொழியையடுத்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை வலிறுத்தி புதுக்குடியிருப்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் போராளி மாதவமேஜரின் போராட்டம் இன்று முடித்து வைக்கப்பட்டது.

ஓரணியில் திரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவெடுத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் போராட்டக்களத்திற்கு சென்று வழங்கிய உத்தரவாதத்தையடுத்து, முன்னாள் போராளி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

அவர் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளை ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி முன்னாள் போராளியான மாதவமேஜர் கடந்த 9ஆம் திகதி புதுக்குடியிருப்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

இதற்கு மறுநாள், தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை, இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்தது. இந்த நிலையில், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான
ரெலோவின் தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், புளொட் சார்பில் க.சிவநேசன், ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சியினர் உள்ளிட்டவர்கள் போராட்டக்களத்திற்கு வந்தனர்.

தமிழ் மக்களின் எதிர்பார்வை பூர்த்தி செய்யும் விதமாக தமிழ் தேசிய கூட்டமைப்பாக கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும், 6 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளதாகவும், தொடர்ந்தும் கட்சிகளை இணைத்துக்கொள்வோம், அதனால் மாதவமேஜர் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழ் கட்சிகள் ஓரணியாக செயற்பட்டு, இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் உறுதியுடன் செயற்பட வேண்டுமென மாதவமேஜர் விடுத்த கோரிக்கையை ஏற்று, எழுத்துமூலம்
உத்தரவாதமளித்தனர்.

புதிதாக வலுப்பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் பலப்படுத்த வேண்டுமென்றும், நம்பிக்கையூட்டும் விதமாக உருவெடுத்துள்ள இந்த கட்டமைப்பில் இணையாமல் விலகிச் செல்பவர்கள் தொடர்பில் மக்கள் முடிவெடுக்க வேண்டுமென்றும் மாதமமேஜர் கோரிக்கை விடுத்தார்.

அவரது தாயாரும், புதுக்குடியிருப்பு- இரணைப்பாலை பங்குத்தந்தை மரியதாஸ் அடிகளாரும் இணைந்து நீராகாரம் வழங்கி, போராட்டத்தை முடித்து வைத்தனர்.

இதேவேளை, கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் போராட்டக்களத்திற்கு வந்திருந்தனர்.

கட்சிகளை ஒன்றிணைய வலியுறுத்தி நடக்கும் போராட்டக்களத்திற்கு வந்த அவர்கள் தமிழ் அரசு கட்சி பிரிந்து சென்றதில் நியாயம் உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு போராட்டக்களத்தில் நின்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ரணிலின் ஏஜெண்ட்டுகள் என குரல் எழுப்பினர்.