தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளருக்கு கிடையாது – ஆணைக்குழு தலைவர்

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு கிடையாது.

கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என அவர் எதனடிப்படையில் சுற்றறிக்கை வெளியிட்டார் என்பது தொடர்பில் விளக்கம் கோர அவரை ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானித்துள்ளோம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்; மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 4(1)ஆவது உறுப்புரையின் பிரகாரம் 2022.12.21ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக சகல நிர்வாக மாவட்டங்களுக்குமான தேர்தல் தெரிவத்தாட்சி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மறு அறிவித்தல் விடுக்கும் வரை கட்டுப்பணத்தை பொறுப்பேற்றும் பணிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அரச நிர்வாகம்,உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் 10 ஆம் திகதி காலை சகல மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த சுற்றறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சகல மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தெளிவுப்படுத்தல் அறிவுறுத்தலை அனுப்பி வைத்துள்ளது. கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுத்தாக்கல் ஆகியவற்றை பொறுப்பேற்றல் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் அந்த சுற்றறிக்கையை மீளப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தல் தெரிவத்தாட்சி அலுவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு, ஆணைக்குழுவிற்கு அப்பாற்பட்ட வகையில் நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் உண்டு, தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்தல் அல்லது ஆலோசனை வழங்கும் அதிகாரம் அரச நிர்வாகம்,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு கிடையாது. இவர் எதனடிப்படையில் குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டார் என்பது தொடர்பில் விளக்கம் கோர அவரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானித்துள்ளோம்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது,ஆகையால் சட்டமாதிபரின் ஆலோசனையை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதால் கட்டுப்பணம் பொறுப்பேற்றலை இடைநிறுத்த அறிவுறுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.முதலில் ஆணைக்குழுவில் பிளவு இருந்தால் தான் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும்.ஆணைக்குழுவிற்குள் எவ்வித பிளவும் கிடையாது என்பதை உறுதியாக அறிவிக்க வேண்டிய தரப்பிற்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.