ஹர்த்தாலின் வாயிலாக தமிழ் மக்களுக்கு எதிரான இன ரீதியிலான ஒடுக்கு முறைகளுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறை தீர்வாகாது என்ற யதார்த்தம் வெளிப்படுத்தப்படும் என்பதனால் அதனை சோபையிழக்கச் செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை அரசாங்கம் எடுக்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ். மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
நேற்று (18) அச்சுவேலி ஹர்தாலுக்கான தெருவோர மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இன்று அச்சுவேலியில் கர்த்தாலை எதிர்த்து தனிநபர் போராட்டத்தை ஒருவர் நடத்துகின்றார். அவரை இன்று தான் அச்சுவேலியில் நாம் முதன்முதலில் காண்கின்றோம். அரசு உள்நாட்டு நீதி பரிபாலனத்தின் வாயிலாக தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு தீர்வை வழங்க முடியும் என்று கூறி சர்வதேசத்திடமிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றது. இந் நிலையில் நாட்டில் நீதித்துறை சுதந்திரமற்றுள்ளது என்ற உண்மைச் செய்தியைச் சொல்வதற்கு குருந்தூர் மலை விவகாரத்தில் பணியாற்றி அச்சுறுத்தல் காரணமாக பதவியையே விட்டு வெளியேறியுள்ள நீதிபதியின் நிலைமை சிறந்த உதாரணமாகும். எமது இனத்திற்கு உள்நாட்டு பொறிமுறைகள் எதுவும் தீர்வைத்தராது என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்கு இச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.
அவ் வகையில் ஏனைய ஹர்த்தால்களைக் காட்டிலும் நீதித்துறையின் சுதந்திரத்தினை மையப்படுத்திய இக் ஹர்த்தால் முக்கியத்துவமுடையது. வெளிநாட்டு ஜனநாயக சக்திகளை திரும்பிப் பார்க்க வைப்பதற்கானது.
இதனால் எப்படியாவது இந்த ஹர்த்தாலை சோபையிழக்க வைக்கவேண்டும் என அரசதரப்பு செயற்படுகின்றது. அரச இயந்திரம் ஹர்த்தாலை சோபையிழக்க வைக்க கடுமையான முயற்சிகளை எடுக்கும். இந் நிலையில் தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட்டு ஹர்த்தாலினை வெற்றியடையச் செய்ய வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் டெலோவின் யாழ் மாவட்டப் பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.