ஏழை நாடுகள் கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு ஐ.நா கோரிக்கை

ஏழை நாடுகளுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு உலக நிதி அமைச்சர்களிடம் ஐநா வளர்ச்சித் திட்டம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு 25 குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் வருவாயில் 20 சதவீதத்தை கடன் சேவைக்காக செலவிட்டதாக அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு, கடன் சுமை தாங்க முடியாததாகிவிட்டது என்றும் ஐநா வளர்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் அச்சிம் ஸ்டெய்னர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று, பணவீக்கம் மற்றும் கடன் வாங்கும் செலவுகளின் அடுத்தடுத்த எழுச்சி 165 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர், சுமார் 1.65 பில்லியன் பேர் ஒரு நாளைக்கு 3.65 டொலருக்கும் குறைவாகவே செலவு செய்கின்றார்கள் என கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிட்டளவு மக்களுக்கு உணவை பெற்றுக்கொள்வதில் கூட பாரிய சவால்கள் காணப்படுவதாகவும் ஐநா வளர்ச்சித் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் வறுமையின் அதிகரிப்பு ஆபத்தானது என சுட்டிக்காட்டிய ஸ்டெய்னர், வறுமையில் உள்ள 165 மில்லியன் மக்கள் அனைவரும் குறைந்த அல்லது குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.