குற்றமிழைத்தவர்களை தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லாத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது என்று கொழும்பு ஆங்கில வார இதழ் தெரிவித்துள்ளது. நேற்று வெளியான அந்தப் பத்திரி கையில், “2023 வரவு – செலவு திட்டத் தின் மீதான இறுதி வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளார்
முதலாவது நல்லிணக்கத்துக்கான யோசனைகளை உருவாக்குவது, இரண்டாவது அமைச்சரவையை விஸ்தரிப்பது. இந்த நடவடிக்கைகள் வரவு – செலவு திட்ட விவாதம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளன. நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றம் கூடும் என்றாலும் அதற்கான வழிமுறைகள் குறித்த விவரங்கள் தெளிவாகவில்லை. எனினும், திங்கட்கிழமை வாராந்தர அமைச்சரவை கூட்டம் நீடிக்கப்படவுள்ளதுடன் இந்த செயல் முறை முன்னெடுக்கப்படவுள்ளது.
குழுவொன்று இது தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்கவுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவை அமைப்பது முக்கியமான நடவடிக்கையாக காணப்படும் என கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 2018 இல் ரணில்விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்ததில் பிரதமராக பதவி வகித்த வேளை இந்த யோசனை முன்வைக்கபட்டிருந்தது. இதேவேளை, கருத்துத் தெரிவித்திருந்த ரணில் விக்கிரமசிங்க மூன்று தசாப்த கால மோதலும் ஏனைய விடயங்களும் இலங்கை பொருளாதாரத்தின்மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்திருந்தார். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தென்னாபிரிக்காவின் மாதிரியை பின்பற்றியதாக காணப்படும். எனினும், இலங்கையில் அதனை எவ்வாறானதாக உருவாக்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
விசாரணையின் பின்னர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்களை தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து சில தரப்பினர் விடுத்துள்ள கோரிக்கைகளால் சர்ச்சைகள் உருவாகியுள்ளன. அவ்வாறான ஏற்பாடு இல்லாத ஆணைக்குழுவை அமைப்பது குறித்தே அரசாங்கம்ஆர்வம் காட்டுகின்றது. தற்போது பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்பதால் விசாரணையின் பின்னர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்களை தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லாத ஆணைக் குழுவை அரசாங்கம் விரும்புகின்றது. இதன் காரணமாக சுதந்திர தினத் துக்கு முன்னர் இந்த விடயங்களை நிறைவேற்றுவது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.