கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன்.

கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகளை சாணக்கியன் ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்திருக்கிறார்.ஏற்கனவே தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வாறு அழைக்கத் தொடங்கி விட்டார்கள். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது அவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கிறார்கள். இது இரண்டு தசாப்தங்களுக்கு மேல் ஒன்றாக குடும்பம் நடத்திய பின் கணவன் மனைவியின் நடத்தையையும்,மனைவி கணவனின் நடத்தையையும் விமர்சிப்பதற்கு ஒப்பானது.தமிழரசியல் எவ்வளவு கேவலமாக போய்விட்டது?

ஒட்டுக்குழு என்ற வார்த்தை தியாகி எதிர் துரோகி என்ற அரசியல் வாய்ப்பாட்டிற்குள் காணப்படும் ஒரு வார்த்தைதான். போர்க்காலங்களில் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிய பரா மிலிட்டரிக் குழுக்கள் அவ்வாறு ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கப்பட்டன. அதாவது அரசாங்கத்தோடு சேர்ந்து தமது சொந்த மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்ற பொருள்பட.

அப்படிப் பார்த்தால் இப்பொழுது தமது அரசியல் எதிரிகளை ஒட்டுக் குழுக்கள் என்று அழைப்பதனை எப்படி விளங்கிக் கொள்வது? அவர்கள் அரசாங்கத்தோடு நிற்கிறார்கள் என்ற பொருளிலா? கஜேந்திரகுமார் ஒரு படி மேலே சென்று அவர்களை இந்தியாவின் ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கிறார். இவ்வாறு மற்றவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கும் தகுதிகளை இவர்கள் எப்பொழுது பெற்றார்கள்? எங்கிருந்து பெற்றார்கள்?குறிப்பாக சாணக்கியன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வர முன்பு எங்கே நின்றார் ?யாரோடு நின்றார் ?எப்படி அவர் தமிழரசு கட்சிக்குள் வந்தார்? இப்பொழுது மற்றவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று கூறும் இவர்கள் எப்பொழுது தங்களை தியாகிகள் என்று நிரூபித்தார்கள்?

கடந்த 13 ஆண்டுகளாக நினைவு கூர்தலில் துணிச்சலான சில நடவடிக்கைகளை முன்னெடுத்ததைத் தவிர, நாடாளுமன்றத்தில் வீரமாகப் பேசியதைத் தவிர எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த ஒரு தியாகமும் செய்திருக்கவில்லையே? குறைந்தது தங்களுக்கு நாடாளுமன்றத்தில் கிடைக்கும் சலுகைகளைக்கூடத் துறக்கவில்லை. மற்றவர்களைத் துரோகிகள் என்று அழைப்பதால் யாரும் தியாகிகள் ஆகிவிட முடியாது. அவரவர் தாங்கள் தங்களுடைய சொந்த தியாகங்களின் மூலந்தான் தங்களை தியாகிகளாகக் கட்டியெழுப்பலாம். ஆனால் கடந்த 13 ஆண்டு கால அரசியலானது ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இப்பொழுதும் தியாகி – துரோகி என்ற வகைப் பிரிப்புக்குள் சிக்கப் போகின்றதா?

ஆயுதப் போராட்டத்தில் ஒருவர் தன்னைத் தியாகி என்று நிரூபிப்பதற்கு ஆகக்கூடியபட்ஷ வாய்ப்புக்கள் இருக்கும்.ஆனால் ஒரு மிதவாத அரசியலில் அப்படியல்ல. இரண்டுமே இருவேறு ஒழுக்கங்கள். மிதவாத அரசியலில் ஒருவர் தன்னை தியாகி என்று நிரூபிப்பதற்கு காலம் எடுக்கும். கடந்த 13 ஆண்டுகளில் தமிழ் அரசியலில் யாருமே தங்களை தியாகிகள் என்று நிரூபித்திருக்கவில்லை. எனவே மற்றவர்களைத் துரோகிகள் என்று கூறுவதற்கு யாருக்குமே தகுதி கிடையாது.

தனது முன்னாள் பங்காளிகளை நோக்கி தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களைப் பார்க்கும் பொழுது ஒருபுறம் அவர்கள் தமது எதிரிகளைக் குறித்து பதட்டமடைவதையும் அது காட்டுகிறது. இன்னொரு புறம் இனி வரக்கூடிய தேர்தல் அரங்குகளில் பிரச்சார உத்திகள் எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு இறங்கப் போகின்றன என்பதனையும் அவை கட்டியம் கூறுகின்றன.

தமிழ் மக்கள் ஒரு ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள். எனவே எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும். எல்லாருக்குமே கூட்டுப் பொறுப்பு உண்டு.ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்திய மக்கள் கூட்டம் கடந்த காலத்தை கிண்ட வெளிக்கிட்டால், பெருமளவுக்குப் புதைமேடுகளைத்தான் கிண்ட வேண்டியிருக்கும். இறந்த காலத்தின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைக் குற்றம் சாட்ட முற்பட்டால் புதை மேடுகளைத்தான் கிண்டவேண்டியிருக்கும். தமிழ் மக்கள் இறந்த காலத்தின் புதை மேடுகளைக் கிண்டினால் பிணமும் நிணமும் எலும்புக் கூடுகளும்தான் வெளியே வரும்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. வானத்திலிருந்து குதிக்கவும் இல்லை. அது முன்னைய மிதவாத அரசியலின் தோல்வியில் இருந்தே பிறந்தது.இன்னும் கூராகச் சொன்னால் மிதவாத அரசியலின் மீது தமிழ் இளையோருக்கு ஏற்பட்ட விரக்தி சலிப்பு ஏமாற்றம் என்பவற்றின் விளைவே ஆயுதப்போராட்டம் எனலாம். அவ்வாறு இளையோரை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தூண்டியதில் தமிழ் மிதவாதிகளுக்கு பெரிய பங்கு உண்டு.நமது தேர்தல் தோல்விகளின் போதெல்லாம் தீவிர அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதன்மூலம் தமிழரசுக் கட்சி தனது வாக்கு வங்கியை பாதுகாக்க முற்றுபட்பட்டிருக்கிறது. இம்முறையும் அதைத்தான் தமிழரசு கட்சி பேச்சுவார்த்தை அரங்கில் செய்து கொண்டிருக்கிறது. தீவிர எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதன் மூலம் தான் இழந்த தமது வாக்கு வங்கியை மீளப் பெறலாம் என்று தமிழரசு கட்சி நம்புகின்றது.

இவ்வாறு தமது தேர்தல் தோல்விகளின் பின் தமிழரசு கட்சியும் ஏனைய தமிழ் மிதவாத கட்சிகளும் தீவிர நிலைப்பாடுகளை எடுத்ததன.அதன் விளைவாக அவர்கள் இளையோரை வன்முறைகளை நோக்கித் தூண்டி விட்டார்கள். இளம் தலைமுறையின் கோபத்தையும் ஆவேசத்தையும் விரக்தியையும் தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக முதலில் தூண்டி விட்டார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் ஆயுதப் போராட்ட அரசியலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று எந்த ஒரு தமிழ் மிதவாதக் கட்சியும் கூற முடியாது.

தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும், இளையோரின் கோபத்தையும் விரக்தியையும் திசைதிருப்பும் நோக்கத்தோடும் தமிழ் மிதவாதிகள் முழங்கிய கோஷங்கள் பல “வேர்பல் வயலன்ஸ்” என்று கலாநிதி சிதம்பரநாதன் கூறுகிறார். ஒரு காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மேடைகளில் தொண்டர்கள் தமது விரலை வெட்டி அந்த ரத்தத்தால் தலைவர்களின் நெற்றிகளில் திலகம் இடுவார்கள். இவ்வாறு ரத்தத்தால் பொட்டு வைத்த காரணத்தால்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் இயக்கத்தில் சேர்ந்த பொழுது பொட்டு என்று அழைக்கப்பட்டதாக ஒரு கதை உண்டு.

இவ்வாறு தமது இயலாமை, பொய்மை, அயோக்கியத்தனம் என்பவற்றிற்கு எதிராகத் திரண்டு வந்த இளையோரின் கோபத்தைத் திசை திருப்பி ஆயுதப் போராட்டத்தை நோக்கி ஊக்கிவித்ததன் மூலம் தமிழ் தலைமைகள் தந்திரமாக போராட்ட பொறுப்பை இளைய தலைமுறையின் தலையில் சுமத்தின. ஆனால் ஆயுதப் போராட்டம் படிப்படியாக அரங்கில் முன்னேற தொடங்கிய பொழுது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மிதவாதிகள் பின்னரங்கிற்கு தள்ளப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டம் மிதவாதிகளுக்கு எதிராகவும் திரும்பியது.அதாவது ஆயுதப் போராட்டத்தால் தண்டிக்கப்படுவோரின் பட்டியலில் தமிழ் மிதவாதிகளும் இருந்தார்கள் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனினும் அதே ஆயுதப் போராட்டம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பின் ஒரு பண்புருமாற்றத்துக்கு தயாராகியது அதன் விளைவு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.தமிழ் அரசியலில் தோன்றிய அதிகம் சாம்பல் தன்மை மிக்க ஒரு கட்டமைப்பு அது. அதை அதன் அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அதன் தலைவர் சம்பந்தருக்கு இருந்தது. ஆனால் வரலாறு அவருக்குத் தந்த ஒரு முக்கியமான பொறுப்பை அதாவது ஒரு பண்புருமாற்றத்துக்கு தலைமை தாங்க வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்றத் தவறினார். அதன் விளைவாக கூட்டமைப்பு கடந்த 13 ஆண்டுகளாக உடைந்துடைந்து வந்து இப்பொழுது தமிழரசு கட்சி தனியே வந்துவிட்டது. ஏனைய கட்சிகள் ஒரு கூட்டாக நிற்கின்றன.

ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான பண்புருமாற்ற அரசியலுக்கு தலைமை தாங்க முடியாத சம்பந்தர் கூட்டமைப்பைச் சிதைத்தது மட்டுமல்ல,சுமார் இரு தசாப்த காலங்களுக்கு தான் தலைமை தாங்கிய ஒரு கூட்டு ஏன் சிதைந்தது? அதற்கு யார் பொறுப்பு? என்பதைக் குறித்து இன்றுவரையிலும் உத்தியோகபூர்வமாக எதையுமே கூறாத அல்லது கூற முடியாத ஒரு தலைவராகக் காணப்படுகிறார்.

அவர் தலைமை தாங்கிய கூட்டமைப்பு மட்டும் சிதையவில்லை அவருடைய கண்களுக்கு முன்னால் அவருடைய தாய்க் கட்சியாகிய தமிழரசு கட்சியும் சிதையக் கூடிய ஆபத்துக்கள் தெரிகின்றன. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் நாளன்று,மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தின் கட்டுப்பாட்டுக்குள் நிலைமைகள் இருக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்ல, கிளிநொச்சியில் தமிழரசு கட்சிக்குள்ளேயே சிறு உடைவு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக சுமந்திரனின் ஆதரவாளர்கள் தனியாக ஒரு சுயேட்சைக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். சில ஆதரவாளர்கள் சந்தரகுமாரின் சமத்துவக் கட்சியோடு இணைந்து விட்டார்கள். இவை தமிழரசு கட்சியும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் பலமான, இறுக்கமான கட்சியாக இல்லை என்பதனை காட்டுகின்றன.கட்சியின் தலைமைத்துவத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி எதிர்காலத்தில் மேலும் விகார வடிவத்தை அடையக்கூடும். முன்னாள் பங்காளிகளை இப்பொழுது ஒட்டுக் குழு என்று கூறுபவர்கள் தலைமைத்துவப் போட்டி என்று வரும் பொழுது உட்கட்சிக்குள்ளேயே ஒருவர் மற்றவரை எப்படி முத்திரை குத்தப் போகிறார்கள்?

எனவே கூட்டமைப்பின் சிதைவு என்பது சம்பந்தர் ஒரு தலைவராக தோல்வி அடைந்ததை மட்டும் காட்டவில்லை, எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சி சிதைவடையக்கூடிய ஆபத்துகள் அதிகரிப்பதையும் கட்டியம் கூறுகின்றதா?