13 நாட்டைப் பிரிக்கும் என பதறுவது வெட்கக்கேடு – ஜனாதிபதி ரணில்

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படக்கூடாது என்று போர்க்கொடி தூக்குவோர் முதலில் அந்தத் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து 13 ஆவது திருத்தம் முழுமை பெற்றால் நாடு பிளவுபடும் என்று பதறியடிப்பது வெட்கக்கேடானது.” இவ்வாறு தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைப் பயன்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று கடந்த வாரம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்துக்கு எதிராக தெற்கில் உள்ள கடும்போக்குவாத அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

மேற்படி விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தால் நாட்டுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு ஒருபோதும் பிளவுபடாது.

இந்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படக்கூடாது என்று போர்க்கொடி தூக்குவோர் முதலில் அந்தத் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்கவேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் கட்டாயம் அதனை வாசிக்க வேண்டும்.

அதைவிடுத்து இந்தச் திருத்தச் சட்டம் முழுமை பெற்றால் நாடு பிளவுபடும் என்று பதறியடிப்பது வெட்கக்கேடானது.

மொட்டுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், இருவர் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கருத்துக்களை வெளியிடுவதால் ஒட்டுமொத்த மொட்டுக் கட்சியுமே 13 இற்கு எதிர் என்று எவரும் தப்புக்கணக்குப் போடக்கூடாது. 13 ஐ விமர்சிப்போர் தாராளமாக விமர்சிக்கட்டும். ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் என்னிடம் பதில்கள் உண்டு” – என்றார்.