சாந்தனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது!

மறைந்த சாந்தனின் (சுதேந்திரராஜா) உடல் இன்று (4) அடக்கம் செய்யப்பட்டது. மாலை 7 மணிக்கு எள்ளங்குளம் இந்து மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், 33 வருடங்களின் பின்னர் கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி 24ஆம் திகதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஜனவரி 27ஆம் திகதி உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லீரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், பெப்ரவரி 28ஆம் திகதி அதிகாலை சாந்தன் காலமானார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் தனது மகன் சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு இலங்கையில் உள்ள அவரது தாயார் பலமுறை கோரிக்கை வைத்தார். சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், அவர் மரணமடைந்தார்.

சாந்தனின் உடல் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் வழியாக கட்டுநாயக்கா விமான நிலையம் எடுத்து வரப்பட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் எடுத்து வரப்பட்டிருந்தது. வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி, பளை, கொடிகாமம் என பல இடங்களிலும் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த ஊரான உடுப்பிட்டிக்கு எடுத்து வரப்பட்டிருந்தது.

நேற்று தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், உடுப்பிட்டி, இலக்கணாவத்தையிலுள்ள சாந்தனின் சகோதரியின் வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலையில் இறுதிச்சடங்குகள் நடந்து, உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இலக்கணாவத்தை சனசமூக நிலையத்தில் அஞ்சலிக் கூட்டம் நடந்தது.