சாந்தனின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடல், இன்று அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது உடலம் இன்று முற்பகல் 11.35 மணிக்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அவரது உடலை உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானோர் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விமான நிலையத்தின் விதிமுறைகள் பூர்த்தியான பின்னர், நீர்க்கொழும்பு வைத்தியசாலைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நேரடியாக யாழ்ப்பாணம், வடமராட்சி, உடுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது தயாரின் இல்லத்திற்கு சாந்தனின் கொண்டு செல்லப்படவுள்ளது.

அங்கு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் சாந்தனின் உடல், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நல பாதிப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இன்று சாந்தனின் உடல் அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.