ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் ஜனாதிபதி எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்துவார்.
இலங்கையின் தலைவராக யார் தெரிவானாலும் அவர் இந்தியாவுக்கு முதல் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்வது சம்பிரதாயமாகும். இது வழக்கமானதாக இருந்தாலும் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்கிரமசிங்கவை இந்தியா அழைக்கவில்லை. இதனால், அவர் தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. பல தடவைகள் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், அது சாத்தியமாகவில்லை.
இந்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்லும் ஜனாதிபதி அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்துவார் என்று தெரிய வருகிறது. இதேபோன்று அமைச்சர்களையும் சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார். சீனாவின் பெல்ட் அன்ட் றோட் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா செல்லவுள்ளார். இந்த மாநாடு ஒக்ரோபரில் நடக்கிறது. இதில் பங்கேற்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திகதிகளை இந்தியா வழங்கியுள்ளதாக அறிய வருகின்றது.