சீன ஆய்வுக் கப்பலான ‘சி யான் 06’ இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலின் வருகை தொடர்பில் சீனத் தூதரகமும் வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
சீன ஆய்வுக் கப்பலுடன் இணைந்து நாரா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும், கப்பல் இலங்கைக்கு வரும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 06’ ஒக்டோபர் முதல் நவம்பர் வரை கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் நிறுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக சமீபத்தில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த கப்பல் தென் இந்திய பெருங்கடல் பகுதி உட்பட பரந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.