சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே முன்னேற்றம் – ஹர்ஷ டி சில்வா

நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில் 50 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும். அவற்றில் பெருமளவான தொகையை சீன எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது.

எனவே கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே ,  அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் 4 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கின்றதா? என்ற கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் பதிலை எதிர்பார்ப்பதாகவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்த கலந்துரையாடல்களில் கலந்துகொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக ,சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ள விடயம் இன்று பேசுபொருளாகியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு காணப்படுகின்ற பிரதான சவால் சீனாவாகும். சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கான தெளிவானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை. எமது மொத்த வெளிநாட்டு கடனில் 50 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

அதிக அதிக தொகையை சீன எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாம் உண்மையில் கலந்துரையாட வேண்டிய ஒரேயொரு வங்கி சீன எக்சிம் வங்கி மாத்திரமேயாகும். எக்சிம் வங்கியுடன் ஏதேனுமொரு இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே , எம்மால் அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

உலக நாடுகள் இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வருமானம் குறைந்த நாடுகள் ஜீ.20 பொது கட்டமைப்பின் கீழ் எவ்வாறு கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்வது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன. எனினும் இலங்கை போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. எனவே இவ்வாறான நாடுகள் எவ்வாறு கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ளப் போகின்றன என்பதற்கான புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

நாடு எந்த பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான பதில் இல்லை. வருடாந்தம் ரூபாவின் பெறுமதியை தக்க வைத்துக் கொள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு , மத்திய வங்கியினால் வழிகாட்டல் வரைபடம் தயாரிக்கப்படும். எனினும் 2023 ஆம் ஆண்டுக்கான வரை படம் வழங்கப்படவில்லை. எனவே அடுத்த ஆண்டு நாம் பயணிக்கவுள்ளோம் என்பது கேள்விக்குரியாகும்.

எதிர்வரும் 4 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கின்றதா? இதற்கான பதிலையே அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றோம். வழிகாட்டல் வரைபடமொன்று 2023 இல் எங்கு செல்கின்றோம் என்பது தெரியாமலேயே பயணிக்கவுள்ளோம்.

சர்வதேசம் எதிர்பார்க்கும் வேலைத்திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் , ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் முடியாமல் போயுள்ளது. இதற்கான ஒரேயொரு மாற்று வழி புதிய அரசாங்கமொன்றாகும். புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் வேலைத்திட்டத்தை சர்வதேசமும் நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்களால் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க முடியாத அரசாங்கத்தால் , எவ்வாறு நாட்டை நிர்வகித்துச் செல்ல முடியும்?

மக்களுக்கு மேலும் மேலும் சுமையை சுமத்தாமல் , அவர்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்கு வாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் காணப்படுகிறது. எனினும் மார்ச் மாதத்தின் பின்னர் பொதுத் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் அவருக்கு காணப்படுகிறது. அரசியலமைப்பின் படி அதற்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டு;க் கொள்கின்றோம் என்றார்.