சுடலைக்கழிவு அரசியல்? – நிலாந்தன்

1970களில் தமிழ் இளைஞர் பேரவையில் உறுப்பினராக இருந்தவரும் தமிழரசு கட்சியோடு நெருங்கிச் செயற்பட்டவரும்,பிந்நாளில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின், இணைந்த வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்பில் இருந்தவருமாகிய, ஒரு மூத்த அரசியல் செயற்பாட்டாளரின் நேரடி அனுபவம் இது…….தமிழரசுக் கட்சியோடு நெருங்கிச் செயற்பட்ட காலப்பகுதியில் இளையவர்கள் அமிர்தலிங்கத்தின் வீட்டு முன் விறாந்தையில் தங்குவதுiண்டாம். ஒருநாள் இரவு அவர்கள் சுவரொட்டி ஒட்டுவதற்காக போகும்பொழுது அவர்களோடு சேர்ந்து அமிர்தலிங்கத்தின் மகன் ஒருவரும் சென்றிருக்கிறார். இரவு முழுதும் மகனைத் தேடிக் காணாத அமிர்தலிங்கம் அடுத்த நாள் காலை இந்த இளைஞர்களோடு அவரைக் கண்ட பொழுது பின்வரும் தொனிப்படப் பேசியிருக்கிறார்… “நீயும் படிக்காமல் இவங்களப்போல காவாலியாத் திரியப் போறியா?”

1970களில் அமிர்தலிங்கம் எந்த நோக்கு நிலையில் இருந்து அவ்வாறு கூறினாரோ,அதே நோக்கு நிலையில் இருந்துதான் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளின் பின் சுமந்திரனும் கதைக்கிறாரா ? “20 வருடங்களாகக் கூட இருந்தவர்களை நல் வழிப்படுத்த எடுத்த முயற்சியிலும் நாம் தோல்வி அடைந்து விட்டோம்” இவ்வாறு சுமந்திரன் அண்மையில் சாவகச்சேரியில் வைத்துக் கூறியுள்ளார். முன்பு பங்காளிகளாக இருந்த கட்சிகளை நோக்கித்தான் அவர் அவ்வாறு கூறியுள்ளார். அவர்களை நல்வழிப்படுத்த முற்பட்டோம் என்று கூறுகிறார். ஆயின் அவர்கள் திருத்தப்பட வேண்டிய குற்றவாளிகள் என்று பொருள்.ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குற்றவாளிகள் அல்லது திருத்தப்பட வேண்டியவர்கள் என்று அவர் கருதுகிறாரா? இரண்டு தசாப்தங்களாக ஒன்றாகக் குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது இனித் திருந்த மாட்டார்கள் என்று கூறுகிறாரா?

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நல்வழிப்படுத்துவது என்பது ஏறக்குறைய அரசாங்கம் கூறுவதுபோல புனர்வாழ்வழிப்பது என்ற பொருளில்தான்.ஒரு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவ்வாறு கூறத்தக்க மனோநிலை எங்கிருந்து வருகிறது? நாங்கள் தூய மிதவாத கட்சி. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாதவர்கள்.எமது கைகளில் ரத்தம் இல்லை. கொலைப் பழி இல்லை.நாங்கள் படித்தவர்ள்;நாங்கள் எப்பொழுதும் நல்வழியில்தான் செல்கிறோம்…. என்று நம்பும் ஒரு மிதவாத பாரம்பரியத்தில் இருந்தா அவ்வாறு கூறப்படுகிறது?

ஆனால் தமிழரசுக் கட்சி அப்படி கூறமுடியாது. ஏனெனில் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட அரசியல் செயற்பாட்டாளரும் உட்பட ஆயிரக்கணக்கான இளவயதினரை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தூண்டியதே தமிழ் மிதவாதிகள்தான்.குறிப்பாக தமிழரசு கட்சியானது தேர்தல்களில் தோற்கும்பொழுது தீவிர தேசிய நிலைப்பாட்டை கையில் எடுக்கும்.(இப்பொழுது, பேச்சுவார்த்தை மேசையில் தீவிரமான நிலைப்பாட்டை எடுப்பது போல).அப்பொழுது அவர்கள் பேசும் வீர வசனங்களில் மயங்கி இளையோர் அவர்கள் பின் செல்வார்கள்.அந்த இளையோரை தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராகத் திருப்பி அவர்களைத் தண்டிக்குமாறு தூண்டியது தமிழ் மிதவாதிகள்தான். மேடைகளில் அவர்கள் செய்த முழக்கங்களை கலாநிதி சிதம்பரநாதன் “வார்த்தை வன்முறை-வேர்பல் வயலன்ஸ்” என்று வர்ணிப்பார். இவ்வாறு தமிழ் மிதவாதிகளால் தூண்டப்பட்டு போசிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டதே தமிழ் ஆயுதப் போராட்டம் ஆகும். எனவே தமிழரசுக் கட்சி இதில் தனக்கு சம்பந்தமில்லை என்று கூறமுடியாது. தனது கையில் ரத்தம் இல்லை என்றும் கூறமுடியாது.

தமிழரசு கட்சியின் தேர்தல் மேடைகளில் இளையோர் உணர்ச்சிவசப்பட்டு விரலை வெட்டி தலைவர்களின் நெற்றியில் ரத்தத் திலகம் வைத்தார்கள். அவ்வாறு ரத்தத்தால் பொட்டு வைத்த ஒருவர் பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக வந்தார்.அவருக்கு இயக்க பெயரும் பொட்டு என்று வைக்கப்பட்டது. இப்படியாக இளைஞர்களை ரத்தம் சிந்துமாறு ஊக்குவித்த ஒரு கட்சி இப்பொழுது தன்னை ஒரு தூய மிதவாதக் கட்சியாக கூறிக்கொள்ள முடியாது.

ஏன் அதிகம் போவான்? தமிழரசுக் கட்சியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் இந்தியாவில் ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பொழுது அதை அமிர்தலிங்கம் தடுக்கவில்லை.

இவ்வாறு தமது இயலாமை,பொய்மை,போர்க்குணமின்மை என்பவற்றிற்கு எதிராகத் திரண்டு வந்த இளையோரின் கோபத்தைத் திசைதிருப்பி ஆயுதப் போராட்டத்தை நோக்கி ஊக்கிவித்ததன்மூலம் தமிழ்த் தலைமைகள் தந்திரமாக போராட்ட பொறுப்பை இளைய தலைமுறையின் தலையில் சுமத்தின.ஆயுதப் போராட்டம் படிப்படியாக அரங்கில் முன்னேறத் தொடங்கிய பொழுது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மிதவாதிகள் பின்னரங்கிற்கு தள்ளப்பட்டார்கள்.ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டம் மிதவாதிகளுக்கு எதிராகவும் திரும்பியது.அதாவது ஆயுதப் போராட்டத்தால் தண்டிக்கப்படுவோரின் பட்டியலில் தமிழ் மிதவாதிகளும் இருந்தார்கள் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனினும் அதே ஆயுதப் போராட்டம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பின் ஒரு பண்புருமாற்றத்துக்கு தயாராகியது அதன் விளைவுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.கூட்டமைப்பு எனப்படுவதே 2009க்கு முந்திய ஒரு பண்புருமாற்றத்தின்-trasformation-விளைவுதான்.நவீன தமிழ் அரசியலில் தோன்றிய சாம்பல் பண்பு அதிகமுடைய (grey) ஒரு கட்டமைப்பு அது. அப்பண்புருமாற்றத்தை 2009 க்குப் பின் அடுத்த கட்டக் கூர்ப்புக்கு எடுத்துச் செல்ல சம்பந்தர் தவறிவிட்டார்.வரலாறு அவருக்கு நிர்ணயகரமான,உன்னதமான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது.ஆனால் வரலாறு அவருக்கு வழங்கிய பொறுப்பை அவர் பொருத்தமான விதத்தில் நிறைவேற்றவில்லை.ஒரு பண்புருமாற்ற காலகட்டத்தை அவர் வீணடித்து விட்டார்.ஒரு பண்புருமாற்றத்துக்குத் தலைமைதாங்க அவரால் முடியவில்லை.அதற்கு அவசியமான அரசியல் உள்ளடக்கமும் அவரிடமில்லை.

 

தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள். ஆயுதப் போராட்டம் என்றாலே எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும். இதில் எல்லாருக்கும் ஏதோ ஒரு விகிதமளவுக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு.தமிழ் மக்கள் தங்களுடைய இறந்த காலத்தைக் கிண்டத் தொடங்கினால் பிணமும் நிணமும் எலும்புக்கூடுகளுந்தான் வெளியேவரும்.தமிழ் மக்களைப் பொறுத்தவரை இறந்த காலத்தை கிண்டுவது என்பது அதன் பெரும்பாலான அர்த்தத்தில் புதைமேடுகளைக் கிண்டுவதுதான்.அப்படிக் கிண்டத் தொடங்கினால்,ஒருவர் மற்றவரைக் குற்றவாளியாக்குவதிலேயே தேசம் பல துண்டுகளாக சிதறிப் போய்விடும்.

ஒர் ஆயுத மோதலுக்கு பின்னரான அரசியல் என்ற அடிப்படையில்,தமிழ் மக்கள் இரண்டு தளங்களில் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. ஒன்று நீதிக்கான போராட்டம்.இரண்டு,அந்தப் போராட்டத்துக்காக தேசத் திரட்சியை ஆகக்கூடியபட்சம் உடையவிடாமல் பாதுகாப்பது.அவ்வாறு தேசத்திரட்சியை பலமான நிலையில் பேணுவதென்றால்,அதற்கு தமிழ் அரசியலில் பண்புருமாற்றம் அவசியம்.அதாவது வெளி நோக்கிய நீதிக்கான போராட்டம்; உள்நோக்கிய பண்புருமாற்றம்.அதற்கு பரந்த மனம் கொண்ட பெருந்தலைவர்கள் வர வேண்டும்.

ஆனால் சம்பந்தர் அவ்வாறான ஒரு பெருந் தலைவரல்ல.தமிழ் அரசியலில் முன்னெப்பொழுதும் தோன்றியிராத ஒரு சாம்பல் பண்புமிக்க கூட்டுக்கு சுமார் 20 வருடங்கள் அவர் தலைமை தாங்கினார்.தமிழ் மிதவாத அரசியலிலேயே அதிகளவு ஆசனங்களை(22) வென்ற அக்கூட்டு படிப்படியாகச் சிதைந்து போய்விட்டது.அதற்கு அவரும் பொறுப்பு.அவர் தலைமை தாங்கிய ஒரு கூட்டுக் கலைந்தபொழுது,அதன் தலைவராக,அதைக்குறித்து அவர் உத்தியோகபூர்வமாக எதையும் சொல்லவில்லை.அல்லது சொல்ல முடியவில்லை.கூட்டமைப்பின் சிதைவு என்பது சம்பந்தருடைய தலைமைத்துவத்தின் தோல்வியுந்தான்.தமிழ் பண்புருமாற்ற அரசியலின் தோல்வியுந்தான்.அது தமிழரசுக் கட்சியின் தோல்வியுமா என்பதை இனிவருங்காலமே தீர்மானிக்கும்.

கடந்த சில கிழமைகளுக்குள் கூட்டமைப்பு மட்டும் சிதையவில்லை தமிழரசு கட்சியும் இறுக்கமான ஒரு கட்சியாக உள்ளதா என்ற கேட்குமளவுக்கு நிலைமைகள் காணப்படுகின்றன.கடந்த கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும்போது மார்ட்டின் வீதியில்,கட்சித் தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.ஆனால் வேட்பு மனுக்கள் சுமந்திரனின் அணியைச் சேர்ந்த ஒருவருடைய அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு நேரடியாக கச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக குற்றஞ் சாட்டப்படுகிறது.அதாவது கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இல்லை என்று பொருள்.அது மட்டுமல்ல, கிளிநொச்சியில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது, சுமந்திரனுக்கு விசுவாசமான அணியைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் சுயேச்சைக் குழுவாக போட்டியிடுகிறார்கள்.அவர்களில் சிலர் சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியில் இணைந்து விட்டார்கள்.சிறீதரனின் அன்ரன் பாலசிங்கம் கட்சியை எங்கே கொண்டு போகிறார்?

பிரதேசசபைத் தவிசாளரின் வீட்டின் முன் போடப்பட்ட சுடலைக்கு கழிவு

கடந்த திங்கட்கிழமை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரின் வீட்டுக்கு முன் சுடலைக் கழிவுகள் ஒரு மூட்டையாகக் கட்டிப் போடப்பட்டுள்ளன என்பதனை அவர் முகநூலில் பதிவேற்றியுள்ளார்.அதை யார் செய்தது என்பது நிரூபிக்கப்படவில்லை.எனினும் முகநூலில் பிரதேச சபை தவிசாளர் எழுதிய குறிப்பில்,சுயேட்சைக் குழுவின் மீதே குற்றஞ் சாட்டப்படுகிறது.ஒரே கட்சிக்குள் ஒரே தேர்தல் தொகுதிக்குள் ஏற்பட்ட மோதல்கள் சுடலைக் கழிவுகளை வீட்டின் முன் போடும் அருவருப்பான ஒரு வளர்ச்சிக்கு வந்து விட்டனவா? இருபது வருடங்களாக ஒன்றாகக் குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது முன்னாள் பங்காளிகளை ஒட்டுக் குழுக்கள்.தூள் கடத்திகள்,தலையாட்டிகள் என்று அழைக்கலாமென்றால்,நாளை,கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறுபவர்களுக்கு என்னென்ன பட்டங்களைச் சூட்டப் போகிறார்கள்?