ஜுன் 8 முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்தக் கோரி போராட்டம் – அனுரகுமார

உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஜூன் 8 ம் திகதி முதல் மீண்டும் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜூன் 8ம் திகதி தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா அம்பாந்தோட்டை அனுராதபுரத்தில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் இறுதியாக கொழும்பை சுற்றிவளைப்பதற்கான மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்கள் மக்களிற்கும் நாட்டிற்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளனர் 68 வீதமான மக்கள் உணவு உண்பதை குறைத்துக்கொண்டுள்ளனர் என்பதை மத்திய வங்கியின் சமீபத்தைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 வீதமானவர்கள் மருந்துகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர் மேலும் நாற்பது வீதமானவர்கள் கல்விச்செலவுகளை நிறுத்திவிட்டனர் எனவும் மத்திய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.சுமார் 500,000 தொழிலாளர்கள் தங்கள் தொழில்களை இழந்துள்ளனர் பெரும்பான்மையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை மக்கள் வாழக்கூடிய நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது தேசிய மக்கள் சக்தி அந்த சவாலை ஏற்றுக்கொள்ள தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு முதல் ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் அதற்கு முன்னர் உள்ளுராட்சி மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.