தமிழர்களிடமிருந்து நிலப் பகுதியை குறைக்க வேண்டும் என தென் இலங்கை திட்டமிட்டு செயல்படுகிறது- முன்னாள் யாழ்.பல்கலை துணைவேந்தர்

மகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் பத்து லட்சம் காணிகளில் தமிழர்கள் எவருக்கும் ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ், நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற இந்து சமயம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் துணைப் பொருளில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில்,

இலங்கையில் காணப்படுகின்ற தொல்லியல் திணைக்களம், வனவத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன மிக வேகமாகச் செயற்படுகின்றன.

தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள் மேய்ச்சல் தரவைகள் வழிபாட்டு இடங்களை தொல்லியல் வன ஒதுக்கப்பகுதி என காணிகளை கையகப்படுத்தி காணி அற்றவர்களாக்குவதே திட்டம்.

யுத்த காலப்பகுதியில் தமிழர்களுடைய புராதன அடையாளங்கள் மற்றும் வரலாற்று நிலங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழர்களிடமிருந்து நிலப் பகுதியை குறைக்க வேண்டும் என்பதில் தென் இலங்கை திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.

மகாவலி அதிகார சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் பிரதேச செயலகமோ மாவட்ட செயலகமோ கேள்வி கேட்க முடியாத அளவுக்கு அதிகாரம் உள்ள சபையாக காணப்படுகிறது.

மகாவலி L வலயத்தில் உள்ளடங்கும் முல்லைத்தீவு மாவட்டம் வெலி ஓயா பகுதி மற்றும் முழுதாக சிங்கள மக்களுக்கே குடியேற்ற திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் காணியற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் காணிகள் வழங்கப்படவில்லை.

இந்து சமயம் பல்வேறு வழிகளிலும் நசுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றன.

இந்து சமயத்தில் இருக்கின்ற பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து வலுவான ஒரு அமைப்பின் கீழ் செயல்படும்போது தமிழ் மக்களின் நிலங்களையும் இந்து சமயத்தையும் பாதுகாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.