தமிழர் தலைநகர வரலாற்றுத் தொன்மைகள் மாகாண அதிகாரத்தில் இருந்து சிங்கள மயமாகிறது : சபா.குகதாஸ் கவலை

ஈழத் தமிழரின் வரலாற்று பூர்வீக வாழ்விடமான கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் திகாமடுள்ள என பெயர் மாறி பறிபோன பின்னர் திருகோணமலை கடந்த காலங்களில் சிங்கள குடியேற்றங்களால் பெரு நிலப்பரப்புக்கள் பறிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வரலாற்றுத் தொன்மைகளைக் கொண்ட  ஆதாரங்களை சிங்கள மயப்படுத்தும் வேலைத் திட்டத்தை தொல்லியல் திணைக்களம் மூலமாக மத்திய அரசின் ஆளுகைக்குள் உட்புகுத்தி பௌத்த சிங்கள சின்னங்களை புதிதாக அமைத்து வரலாற்றை மாற்றி வருகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா. குகதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகளுக்கு அருகாமையில் புராதன பிள்ளையார் ஆலயம் இருந்தது அதனை ஆலய நிர்வாகம் முற்றாக இடித்து புதிதாக எடுத்த முடிவை தமக்கு சாதகமாக பயன்படுத்திய அரிசிமலைப் பிக்கு தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆக்கிரமிப்பின் உச்சம் இன்று கன்னியா வெந்நீர் உற்றுப் பகுதிகள் யாவும் தொல்லியல் திணைக்கள ஆக்கிரமிப்பில் வந்துள்ளது அத்துடன் பார்வையாளர்கள் செல்வதற்கான அனுமதி சிட்டை வருமானம் மத்திய அரசாங்கம் வசமாகி விட்டது. மொத்தத்தில் மாகாண அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.