தவிசாளர் நிரோஸ், தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்திய வழக்கு யூலை 17க்கு தவணையிடப்பட்டது

யாழ் – நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட அரச கருமங்களுக்கு முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தடை ஏற்படுத்தினார் என தொடுக்கப்பட்ட வழக்கில், காவல்துறையினர் தாம் மேலதிக ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து எதிர்வரும் யூலை மாதம் 17 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.

வெள்ளிக்கிழமை 31.03.2023 மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே அச்சுவேலி காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது காவல்துறை தரப்பில் இருந்து தாம் மேலதிக ஆலோசனையினைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மன்றில் தெரியப்படுத்தப்பட்டது.

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் இராணுவத்திணருடன் இணைந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் அத்திபாரம் போன்று வெட்டிய நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் நிரோஸ் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட எதிர்பின் காரணமாக இரண்டாது தடவையாகவும் தொல்லியல் திணைக்களத்தினால் நிலாவரையில் நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்த தியாகராஜா நிரோஸ் பெருந்தொகையானோரை அழைத்து வந்து தமது கருமங்களுக்கு தடை ஏற்படுத்தனார் என மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

இதனிடையே கடந்த மாதமும் இராணுவத்தினரால் புத்தர் சிலையுடன் பௌத்த கட்டுமானம் ஒன்று நிலாவரையில் நிறுவப்பட்ட நிலையில், அவை தவிசாளர் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பின் காரணமாக உடனடியாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தகது.