தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்

தீர்வு திட்ட விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்குவோம். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சி பக்கம் பந்து வீசுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் ‘மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்த கூட்டு பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (23) கொழும்பில் உள்ள கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

1983 கறுப்பு ஜூலை சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழர்களும் பாதிக்கப்பட்டார்கள். கொழும்பில் எமது பெரிய வீடு எரிக்கப்பட்டது. மோசடி செய்து கட்டிய வீடு அல்ல,எனது தந்தையின் கடின உழைப்பால் கட்டிய வீடு, இனகலவரத்தில் வீடும்,உடமைகளும் எதிர்க்கட்டது. நாட்டுக்குள் அகதிகளாக இருந்தோம். இவை மறக்க முடியாத சம்பவம்.நாட்டில் மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் தமது வீடுகள் எரிக்கப்பட்டதை பொதுஜன பெரமுனவினர் புலம்பிக் கொண்டு குறிப்பிட்டார்கள். வன்முறையை நாங்கள் கடுமையாக எதிர்கிறோம். தீயிடும் கலாசாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.எமது இருப்புக்கள் வரலாற்றில் தீக்கிரையாக்கப்பட்டன. ஆசியாவில் சிறந்த தொன்மை வாய்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இவற்றையும் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எமக்காக எவரும் அன்று குரல் கொடுக்கவில்லை என்பதை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களிடம் குறிப்பிட்டோம்.

ஒரு நாடு என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை. சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு பிறிதொரு சட்டம் என்று வேறுபாடு காணப்படுகிறது.ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் பேசப்படுகிறது.

கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்க்கப்பளிக்கப்பட்ட இராணுவ சார்ஜன் மேஜர் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். சுனில் ரத்நாயக்க 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த களத்துக்கு அப்பாற்பட்ட வகையில் மிருசுவில் பகுதியில் முகாமுக்கு அருகில் விறகு தேடி வந்த எட்டு வயது சிறுமி உட்பட எட்டு பேரை வெட்டிக் கொன்றார்.

விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியது, கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இவ்வாறான பின்னணியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்வாறு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை கொள்வார்கள். இதனால் தான் அவர்கள் சர்வதேச நீதி பொறிமுறையை கோருகிறார்கள்.

மத்திய வங்கி குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக குறிப்பிட்டு பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி அண்மையில் பொது மன்னிப்பு வழங்கினார். இந்த செய்தியை வெளியிட்ட ஒரு சில ஊடகங்கள் மத்திய வங்கி குண்டுத்தாக்குதல் சம்பள காணொளியை காண்பித்து நீண்ட விளக்கம் அளித்தன. இந்த ஊடகங்கள் கறுப்பு ஜூலை சம்பவத்தை காண்பிக்கவில்லை. இந்த ஒருதலைபட்ச செயற்பாடு தவறு. நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற வரையறைக்குள் இருந்து செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வழங்க கூடியதையும், வழங்க முடியாததையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் இந்திய விஜயத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்துக்கு வருகை தந்து குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன்.

அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண வேண்டும்.அதற்கு முன்னர் அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். அதிகார பகிர்வு விவகாரத்தில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கடுமையாக விமர்சிக்கிறார். வரலாற்றில் இதுவே இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கம் தீர்வு திட்டத்தை முன்வைக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தீர்வு திட்டத்தை முன்வைக்கும் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது. தீர்வு திட்ட விவகாரத்தில் இரு அரசியல் கட்சிகளும் விளையாடிக் கொண்டன. இந்த விளையாட்டு இம்முறை செல்லுபடியாகாது.

தீர்வு திட்ட விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்குவோம். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சி பக்கம் பந்து வீசுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள போவதில்லை என்றார்.