துமிந்தவுக்கு கோத்தபாய வழங்கிய பொதுமன்னிப்பை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துமிந்த சில்வாவுக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டத்தில் செல்லுபடியாகாது என்று இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

இதன்படி, அரசியலமைப்பு விதிகளை பின்பற்றாததற்காக துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, துமிந்த சில்வா தொடர்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

2021 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது.