உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள திறைசேரி நிதி வழங்குவதை தாமதப்படுத்துவதால் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்க தீர்மானித்துள்ளோம்.
தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை புதன்கிழமை வெளியிட எதிர்பார்த்துள்ளோம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசியலமைப்பின் பிரகாரம், எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக உயர்நீதிமன்றத்துக்கு வாக்குறுதி வழங்கினோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தேர்தல் பணிகளை தொடருமாறு உயர்நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள 10 பில்லியன் ரூபாவை திறைசேரியிடமிருந்து முழுமையாக கோரவில்லை. ஆரம்பகட்ட பணிகளை கூட முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை கட்டம் கட்டமாக விடுவிப்பதை திறைசேரி தாமதப்படுத்துகிறது.
நிதி நெருக்கடியால் தபால் மூல வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை அரச அச்சக திணைக்களம் கடந்த திங்கட்கிழமை இடைநிறுத்தியது. நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரியிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவது கடினமானது என திறைசேரி அறிவித்துள்ளது.
நிதி நெருக்கடியினால் எதிர்வரும் 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த தபால்மூல வாக்கெடுப்பு மறுஅறிவித்தல் விடுக்கும் வரை பிற்போடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது நிச்சயமற்றதாக உள்ளது. ஆகவே உயர்நீதிமன்றத்துக்கு வழங்கிய வாக்குறுதியை எம்மால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள திறைசேரி நிதி விடுவிப்பை தாமதப்படுத்துவதால் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் உள்ளமைக்கு வருத்தமடைகிறோம் எனவும், தேர்தல் தொடர்பில் தற்போதைய நிலைவரத்தை உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாளைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.