அதிகளவிலான மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்

பொருளாதார நெருக்கடிகள், அரசியல் குளறுபடிகள் மற்றும் அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக்கொள்கை காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவ நிபுணர்களின்   எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த மாதத்தில் மாத்திரம் 50 முதல் 60 வரையிலான அரச வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

குறிப்பாக, சில வைத்தியர்கள் விடுமுறை பெறாமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறியுள்ள மருத்துவ நிபுணர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் எண்ணிக்கைகளும் சுகாதார அமைச்சினால் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைவாக மொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கிராம மட்டங்களில் உள்ள அரச மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் வெளியேறுதல் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைகள் இதுவரையில் மருத்துவ நிபுணர்களின்  பற்றாக்குறையால் பாதிக்கப்படவில்லை.

மேலும், அங்கு விசேட வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலையில் காணப்பட்ட போதிலும்,  தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர்.

அதேவேளை, அதிகளவிலான வைத்திய ஆலோசகர்களும் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் உறுதியின்மையே வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற பிரதான காரணமாகும். அதேபோன்று அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பில் இந்த தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

மேலும், தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுத்துள்ள நியாயமற்ற வரிக்கொள்கையும் மற்றுமொரு காரணமாகும். இதனாலும் அதிகளவிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என்றார்.