பேராசிரியர்களில் ஒருவர் 83 கலவரங்களின் போது தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரித்து சூறையாடியர் – ருகுணு பல்கலைக்கழக துணைவேந்தர் குற்றச்சாட்டு

1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த ஒரு பேராசிரியரே இன்று என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிறார். அவர்கள் பல்கலைக் கழகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். வீடற்ற தமிழ்க் குடும்பம் ஒன்றுக்கு வீட்டைக் கட்டிக் கொடுத்து விட்டு அரசியல் செய்யட்டும் என்று ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன தெரிவித்துள்ளார்.

ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தரை ஏழு நாட்களுக்குள் பதவி நீக்க வேண்டும் எனக் கோரி நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இது தொடர்பில் பகிரங்க அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேனவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 15 ஆம் திகதி நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். அதேநேரம் ருகுண பல்கலைக்கழக வெலமடம வளாகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளால் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், ஏழு நாட்களுக்குள் துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு நிபந்தனைக் கடிதமொன்றை அனுப்புவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறி கடந்த 5 ஆம் திகதி தனது அலுவலகத்துக்குச் சென்ற சமயம், அவரது அறையிலிருந்து வழக்கத்துக்கு மாறான மணம் வந்ததாகவும், அது அவரைக் கொலை செய்யும் வகையில் பரவ விடப்பட்ட நச்சு வாயுக் கசிவு என்றும் துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவையனைத்தும் தன்னைப் பதவி நீக்கம் செய்வதற்காக வேண்டுமென்றே சோடிக்கப்பட்டவை என்று குறிப்பிட்டுள்ள துணைவேந்தர், தனக்கெதிரான சதியில் முன்னிற்போருக்கு எதிராகப் பல குற்றச் சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.

இதேநேரம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தான் மறுப்பதாகத் தெரிவித்துள்ள துணைவேந்தர், மேலும் குறிப்பிடுகையில் றொகான் லக்சிறி, பேராசிரியர் நிரமல் ரஞ்சித் தேவசிறி மற்றும் பேராசிரியர் உப்புல் அபேரத்ன ஆகியோர் அரசியல் காரணங்களுக்காகவே என்னைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு பாடுபடுகிறார்கள்.

நான் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இரண்டாவது தடவையாகத் திறமை அடிப்படையில் கூடிய புள்ளிகளைப் பெற்றுத் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டவன். அரசியல் செல்வாக்கினால் பதவியைப் பெற்றவன் நானல்ல. இங்கு கலாநிதிப் பட்டத்துக்காக நிதியைப் பெற்று விட்டு 13 வருடங்களுக்கு மேல் பணத்தை மீளளிக்காமல் இருப்பவர்களும், ஆராய்சி ஒதுக்கீடுகள் மற்றும் பரீட்சைகளில் மோசடி செய்வோருமே எனக்கு எதிராக என்னைப் பதவி நீக்கம் செய்யத் துடிக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த ஒரு பேராசிரியரே இன்று என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிறார். அவர்கள் பல்கலைக் கழகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். வீடற்ற தமிழ்க் குடும்பம் ஒன்றுக்கு வீட்டைக் கட்டிக் கொடுத்து விட்டு அரசியல் செய்யட்டும் என்று பகிரங்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.