பொன்னாவெளி சுண்ணக்கல் விவகாரத்தில் புவியியல் போராசிரியர்கள் மௌனம் காக்கக் கூடாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச பொன்னாவெளி பகுதியை மையமாக கொண்டு சுண்ணாம்புக்கல் அகழ்வதற்கும் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அகழ்வுப் பணி நடைபெற்றது. பின்னர் வனவளத் திணைக்களம் தலையிட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் மக்கள் ஐந்து மாதங்களை கடந்து போராடுகின்றனர்.
சுண்ணக்கல் அகழ்வு தொடர்பாக தடுப்பதற்கு அரசியல்வாதிகள் மக்களுடன் நின்று ஊடகங்களுக்கு அறிக்கை விடுவது மட்டும் தான் நடைபெறுகிறது.
ஆனால் இதனை தடுப்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் மற்றும் புவியியல் சார்பான விளக்கங்கள் உரிய நிபுணர்கள் அல்லது விரிவுரையாளர்கள் போன்ற தரப்பால் இதுவரை அரசாங்கத்தை நோக்கியோ அல்லது பொதுவாகவோ முன் வைக்கப்படவில்லை.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட புவியியல் சார்பு கல்விமான்கள் மௌனம் காப்பது நல்லதல்ல. புவியியல் ரீதியாக யாழ்ப்பாண பாறை அமைப்பு மயோசின் கால சுண்ணக்கல் வகைக்குரியதாகும்.
அத்துடன் இளமடிப்பு பாறை வகைக்கு உரியதாகவும் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் பாரிய அகழ்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.
இதனை மையமாக கொண்டு புவியியல் பேராசிரியர்கள் இவை தொடர்பான கருத்துக்களை வெளியிட வேண்டும் காப்பிரேட் கம்பனிகளினால் உலகில் பல இடங்கள் பாலை வனங்களாகவும் மக்கள் வாழ முடியாத பிரதேசங்களாகவும் மாறி வருவதை போன்று எதிர் காலத்திலும் பொன்னாவெளி பிரதேசம் மாறிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.