“லொகான் ரத்வத்தை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்தார்” – தமிழ்க் கைதி ஒப்புதல் வாக்குமூலம்

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தன்னைதுப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதோடு மரண அச்சுறுத்தல் விடுத்தார் என அரசியல்கைதியொருவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் நுழைந்த அமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்கைதி பூபாலசிங்கம் சூரியபாலன் என்பவரே இந்த குற்றச்சாட்டை நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.

மேலும்,” சிறைச்சாலைகள் அமைச்சர் எங்களை சந்திக்க விரும்புகின்றார் விடுதலைக்கான கையெழுத்துக்களை பெறவிரும்புகின்றார் என சிறைச்சாலைகள் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்து, எங்களை வெளியில் அழைத்து சென்று வரிசையாக நிற்க செய்தனர். சிறைச்சாலை பிரதான அதிகாரி தலைமை சிறைக்காவலர் பல பொலிஸ் அதிகாரிகள் அங்கு காத்திருந்தனர் ” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் தன்னை முழங்காலில் இருத்தியதோடு உண்மையை சொல்லுமாறு துப்பாக்கியை தலையை நோக்கி நீட்டி மரண அச்சுறுத்தல் விடுத்தார் ” என அவநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, சந்தேகநபரான இராஜாங்க அமைச்சரும் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.