பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது மாத்திரம் சுமத்துவது முறையற்றது – ஹர்ஷ

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் அமைச்சரவை அமைச்சினை விரிவுபடுத்த முயற்சிப்பது எந்தளவிற்கு நியாயமானது.

வங்குரோத்து அடைந்துள்ள நாடுகளில் இந்தளவிற்கு அமைச்சுக்களும், இராஜாங்க அமைச்சுக்களும் கிடையாது. பொருளாதார சுமையை நாட்டு மக்கள் மீது மாத்திரம் சுமத்துவது முறையற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசாங்கத்திடமிருந்து நிவாரணத்தை எதிர்பார்த்துள்ளார்கள். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  மொத்த தேசிய உற்பத்தியில் 2.43 சதவீதம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் 1.9 சதவீதம் மாத்திரம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும்போது நாட்டில் 30 இலட்சம் பேர் ஏழ்மை நிலையில் இருந்தார்கள்.

ஆனால் அவர் பதவி விலகும் போது நாட்டின் ஏழ்மை நிலை 90 இலட்சமாக அதிகரித்துள்ளது.நாட்டின் மொத்த சனத் தொகையில் 60.3 சதவீதமான குடும்பங்கள் அரசாங்கத்திடமிருந்து நிவாரணத்தை கோரியுள்ளார்கள்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக மற்றும் ஏழ்மை நிலை 2023 ஆம் ஆண்டு பன்மடங்காக அதிகரிக்க கூடும்.

சமூக கட்டமைப்பு மிக மோசமாக பாதிக்கப்படும் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.ஆகவே பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

சமுர்த்தி அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது.சமுர்த்தி பயனாளர்களில் 50 சதவீதமானோர் சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும் சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு உண்மையான தகுதி உள்ள 50 சதவீதமானோருக்கு சமுர்த்தி கொடுப்பனவு கிடைக்கப் பெறுவதில்லை என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுப்படுபவர்களுக்கு சமுர்த்தி நிவாரண கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

இந்நிலைமை முதலில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.நலன்புரி திட்ட சபை ஊடாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வெளிப்படை தன்மையுடனான திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் அரசாங்கம் அமைச்சரவை அமைச்சினை விரிவுப்படுத்த அவதானம் செலுத்தியுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்கள் மாத்திரமல்ல,அரசியல்வாதிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் 38 இராஜாங்க அமைச்சர்களும்,20 அமைச்சரவை அமைச்சுக்கள் 20 உள்ள நிலையில் எந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடுகள்,வங்குரோத்து நிலை அடைந்துள்ள நாடுகளில் இந்தளவு பரந்துப்பட்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் கிடையாது.

பொருளாதார நெருக்கடியை நாட்டு மக்கள் மீது சுமத்தி அமைச்சரவை விரிவுப்படுத்துவதால் பிரச்சினைகள் தீவிரமடையுமே தவிர குறைவடையாது.

தனிநபர் வருமான வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வருமான வரி விதித்தால் அவர்களால் எவ்வாறு வாழ முடியும்.

நாட்டில் இருந்து பெரும்பாலான மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.நாட்டை விட்டு வெளியேறுபவர்களை சட்டமியற்றி தடுக்க முடியாது.

தனிநபர் வருமான வரி அதிகரிப்பு ஊடாக 68 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.நாட்டில் 4 பிரதான நிலை கசினோ சூதாட்டங்கள் கடந்த 07 வருட காலமாக சுமார் 200 மில்லியன் ரூபா வரை வரி செலுத்தவில்லை.

இந்த வரிகளை முறையாக அறவிட்டால்,தனிநபர் வருமான வரியை அதிகரிக்க வேண்டிய தேவை கிடையாது,ஆகவே பொருளாதார பாதிப்பை நாட்டு மக்கள் மீது மாத்திரம் சுமத்த வேண்டாம் என்றார்.