நாட்டின் அடிப்படைப் பிரச்சினை பொருளாதார பிரச்சினை எனவும் அது நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளக்கூடிய விடயமல்ல எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், பிரதம நீதியரசர் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்தாலும் கூட நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை முன்கொண்டு செல்லும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கண்டியில் நேற்று (22) மாலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட வர்த்தகர்கள், சட்டத்தரணிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது தெரிவித்த கருத்துகளை, ஊடக அறிக்கையொன்றின் மூலம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வௌியிட்டுள்ளது.
இதேவேளை தேவைப்பட்டால், மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தியின் இரான் , ஹர்ஷ போன்றவர்களின் முன்மொழிவுகளைக் கூட சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்க முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காவிட்டால், மீண்டும் நெருக்கடியான நிலைமை ஏற்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.