மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கிலேயே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – சபா குகதாஸ்

ஆபிரிக்க நாட்டின் ஒருசில பகுதியிலுள்ளதுபோல இலங்கை மக்களும் அரசுக்கு எதிராக பேச முடியாத நிலையில் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற நிலைபாட்டுக்கு அமைவாகவே உத்தேச பயங்கரவாதச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

உத்தேச பயங்கரவாதச எதிர்ப்புச் சட்டம் மார்ச் மாதம் 22 ந் திகதி வர்த்கமானயில் வெளியிடப்பட்டதையிட்டு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவிக்கையில்

இந்த சட்ட மூலத்தில் சொல்லப்பட்டுள்ள சரத்துக்கள் என்னவென்றால் கடந்தகாலம் நடைமுறைக்கு வந்த பயங்கரவாதச் சட்டத்தைவிட மிக மோசமான சரத்துக்களை உள்வாங்கியிருப்பதாக பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதை நோக்கும்போது இன்று இந்த அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஜனநாயக எதிர்ப்பு போராட்டத்தை யாராவது முன்னெடுத்தால் கடந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தைவிட இந்தச் சட்டம் ஒருபடி மேலாக காவல்துறை அதிகாரி ஒருவர் எவருக்கும் எதிராக இவர் அரசை விமர்சித்தார் என்ற வகையில் பிரதி மா பொலிஸ் அதிகாரியிடம் கொண்டு சென்று சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

பொலிஸ் மா அதிபரின் சிபாரிசில் ஒருவரை மூன்று மாதங்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க முடியும். இதில் அவர் குற்றவாளி எனக் காணப்பட்டால் சுமார் பத்து ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாக முடியும்.

இத்துடன் இவரின் சொத்துக்கள் அரச உடமைகளாக்கும் நிலையும் அத்துடன் ஒரு மில்லியன் ரூபா தண்டப்பணமாகவும் தண்டனை விதிக்க முடியும் என இந்த உத்தேச பயங்கரவாதச் தடைசட்டத்துக்குள் உள்ளடக்கப்ட்டுள்ளது.

ஆகவேதான் இது ஒரு ஜனநாயக அடக்கு முறையாக பார்க்கப்படுகின்றது. மேலும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டத்தில் பத்தாவது சரத்தில் ஊடக அடக்குமுறையும் இதில் அடங்கியுள்ளது.

ஆகவே ஜனநாயக நாட்டில் அடக்குமுறை ஒன்று இச்சட்ட மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என கூறலாம். ஆட்சியாளர்கள் எதைச் செய்தாலும் மக்கள் அவற்றை சுட்டிக்காட்ட முடியாத நிலையே இவ் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆபிரிக்க நாட்டில் ஒருசில பகுதிகளில் மக்கள் இவ்வாறான நிலையில்தான் இருக்கின்றார்கள். இவ்வாறுதான் இலங்கையிலும் மக்கள் இவ்வாறு அடிமைகளாக இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகின்றார்கள் போலும்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டப் பின் தென் பகுதியில் ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்துள்ளது. இதற்காகவே எதிர்காலத்தில் இவ்வாறான செயல்பாடு நடக்கக்கூடாது என்ற நிலையில் இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கை அரசு 1979 ம் ஆண்டிலிருந்து 45 ஆண்டுகளாக தமிழர்களை எவ்வாறு அடக்குமுறையில் வைத்திருந்தார்களோ இப்பொழுது நாடடிலுள்ள ஒட்டுமொத்த மக்களையும் இவ்வாறு வைத்திருக்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள காணி விடுவிப்பு போராட்டங்களைக்கூட முன்னெடுக்க முடியாத நிலைக்கு இச்சட்டம் தடையாக உள்ளது என இவ்வாறு தெரிவித்துள்ளார்.