மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள விவசாயிகளை அந்த பகுதியிலிருந்த ஒரு வாரத்துக்குள் சட்டரீதியாக வெளியேற்ற வேண்டுமென பொலிசார், மகாவலி திணைக்களத்துக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரையான மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் முன்னாள் ஆளுனர் அனுராதா யகம்பத், பௌத்த பிக்குகளின் துணைகளுடன் சிங்கள விவசாயிகள் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டு, இனமுறுகல் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கால்நடைகள் மேய்ச்சல் தரையின்றி சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடந்தது.
ஜனாதிபதி, ஜனாதிபதி செயலாளர், மகாவலி திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், பதில் அரச அதிபர், ஏறாவூர் பற்று, செங்கலடி பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன், கிழக்கு ஆளுனர், மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் (ஜனா), சிவநேசதுரை சந்திரகாந்தன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட நிலங்கள், அந்த மாவட்ட மக்களிற்கே பயன்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
பொலன்னறுவை, அம்பாறை பகுதிகளை சேர்ந்த சிங்களவர்கள் அங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக மகாவலி திணைக்களமும் சுட்டிக்காட்டியது.
அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நீதிமன்றத்தின ஊடாக ஒரு வாரத்தில் வெளியேற்றி, நிலமையை சுமுகமாக்கமாறு ஜனாதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.