மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சில நீதிமன்றங்கள் அனுமதி மறுப்பு

மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சில நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளதுடன், சில நீதிமன்றங்கள் அனுமதி மறுத்துள்ளன.

நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணை இடம்பெற்றது.

மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளை நடத்த முடியாது என இதன்போது நீதவான் உத்தரவிட்டதாக கிளிநொச்சி பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிமன்றம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கடந்த 17, 23 ஆகிய திகதிகளில் வழங்கிய தடை உத்தரவை திருத்தி அமைத்து கட்டளை பிறப்பித்துள்ளது.

இதற்கமைய, தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றின் நிகழ்வினை நினைவுபடுத்தக்கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியாதென நீதிமன்றம் அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியுமெனவும் முல்லைத்தீவு நீதிமன்றம், மாவீரர் நாள் தடை உத்தரவை திருத்தியமைத்துள்ளது.

மாவீரர் தினம் அனுஷ்டிப்பு தொடர்பாக மன்னார் பொலிஸாரினால் நேற்று (26) மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு கோரி பொலிஸாரால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நேற்று (26) நிராகரிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியுமென்பதுடன், இறந்தவர் யாராக இருந்தாலும் அவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு எனவும் முல்லைத்தீவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உயிர் நீத்த உறவுகளுக்கு இன்று நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து உயிர் நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.