மாவீர்களின் கல்லறைகளை சிதைத்து நாடே வெட்கத் தலைகுனியும் அரச பயங்கரவாதத்தை அரசே செய்தது – ரெலோ யாழ். மாவட்ட அமைப்பாளர் நிரோஷ்

கேர்ப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை அரசு படைத்தரப்பின் ஊடாக சிதை;தது நாட்டின் வரலாற்றில் வெட்கக்கேடான அரச பயங்கரவாதம் ஆகும்.போரில் இறந்தவர்களைக்கூட மலினப்படுத்தும் இனவாதமும் வெறித்தனமும் அரசிடம் நிலைத்திருப்பது மனிடத்தன்மை அல்ல. என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தவிசாளர் நிரோஷ் தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் மாவீரர் தினத்தினை அனுஸ்டிக்கும் முகமாக ஈகைச்சுடர் ஏற்றிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நினைவு கூர்தல் என்பது எமது உரிமையாகும். இன்றைய நிலையில் அவ் நினைவுகூறும் உரிமையினை இராணுவ பிரசன்னங்கள், அடாவடித்தனங்கள் ஊடாக தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு மேலாக பொலிசார் பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர்.

எமது மண்ணில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆயுத ரீதியிலான அடக்கு முறைகளுக்கு எதிராக இனத்தினை பாதுகாப்பதற்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவில் கொள்கின்றோம். அவர்களது தியாகங்கள் மாவீரர்களை புனிதர்களாக்கியுள்ளது. இன்றும் இந் நாட்டில் எமது இனம் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டிருக்கின்றது.

இன்றும் கோப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவ முகாம்கள் ஆக்கப்பட்டு வித்தடல்கள் விதைக்கப்பட்ட கல்லறைகளை சிதைத்து அரசு கோரத்தாண்டவமாடியுள்ளது. உலகில் எங்குமில்லாத வன்முறை எண்ணம் இறந்தவர்களின் கல்லறையை சிதைத்த அரச இயந்திரத்திடம் தான் இருக்கின்றது. எத்தனை தடவைகள் மாவீரர் துயிலும் இல்லங்களைச் அரச படைகள் சிதைத்தன என்பதை உலகமே அறியும். அவ்வாறாக கல்லறைகளை சிதைத்த உங்களால் எமது மக்களிடத்தில் இருந்து மாவீரர்களின் தியாகங்களை அகற்ற முடியவில்லை என்பதை கொடூரமாக யுத்தத்தினை முடித்து 12 ஆண்டுகளின் கழிந்த மக்களின் உணர்வுகளில் இருந்து அரசு உணர்ந்தே வருகின்றது. இதனால் அரச கட்டமைப்பு எதிர்கொண்டிருக்கும் பயப்பீதியே சந்திக்கு சந்தியும் இராணுவத்தை நிறுத்தி மக்களை அச்சுறுத்தி அடக்க நினைப்பதற்கான காரணம் ஆகும்.

போரிட்டு மரணித்த மாவீரர்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிராகவோ அவர்களது உரிமைகளுக்கு எதிராகவோ அவர்களது தேசியத்திற்கு எதிராகவோ போரிடவில்லை. எமது இனத்தின் அடையாளங்களும் நிலமும் பூர்வீகமும் திட்டமிட்டு காலத்திற்குக் காலம் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட போது அதற்கு எதிராகவே போராடினர். எம் மூதாதையர் அகிம்சை வழியில் போராடிய போது அதற்கு மதிப்பளிக்காது அகிம்சை வழியையும் ஜனநாயகப் போராட்டத்தினையும் அரச பயங்கரவாதத்தின் ஊடாக நசுக்கியமையின் விளைவாகவே விடுதலைப்போராட்டம் ஆயுத மயப்படுத்தப்பட்டது.

அதில் உலகில் எங்குமில்லாத அளவுக்கு எமது மாவீரர்களின் தியாகங்கள் நிலைத்திருக்கையில் மாவீரர்களை நினைவேந்துவதும் வரலாற்றுக்கடமையும் தெய்வீகக் கடமையும் ஆகும். இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஈகைச்சுடரினை ஏற்றி உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.