சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப் பெற்றுக்கொள்ளவுள்ளமை தொடர்பான மாநாடு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப் பெற்றுக் கொள்ள உள்ளமையுடன் தொடர்புடைய முக்கியத்துவம் மிக்க மாநாடு வியாழக்கிழமை (டிச.08) சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமாகியது.

‘உலகலாவிய பொது அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்கள்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் சீன அதிகாரிகன் , உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பீஜிங் மாநாட்டில் சீன அதிகாரிகளுடன் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் கடன் நெருக்கடி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக பீஜிங் மாநாட்டில் பங்கேற்குமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதானிகளுக்கு சீனா அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கமையவே உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதானிகள் குழுவொன்று பீஜிங்கிற்கு விஜயம் செய்துள்ளது.

‘ இலங்கை தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீண்டு, நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்காக சர்வதேச நிதி நிறுவனங்களுடன் சீனா சாதகமான முறையில் செயற்படும் என்று அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.