வடக்கில் உள்ள அனலைதீவு, நைனாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவுகளில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு இலங்கை அரசினால் சீனாவுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை அழுத்தங்கள் மூலம் இந்தியா கைப்பற்றியுள்ளது.
12 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த திட்டங்கள் 2021 ஆம் ஆண்டு சீனாவின் செனோசர் எச்வின் என்ற நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியிருந்தது. ஆனால் அதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புக்களை இலங்கை அரசுக்கு தெரிவித்ததால் அன்றைய இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா அந்த திட்டத்தை இடை நிறுத்தியிருந்தார்.
சீனா தனது திட்டத்தை மாலைதீவில் உள்ள 12 தீவுகளில் நடைமுறைப்படுத்தியிருந்ததுடன், இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது. எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக சீனாவின் திட்டத்தை நிறுத்திய இலங்கை தற்போது அதனை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.
இதனிடையே, மன்னார், பூநகரி மற்றும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் போன்ற பிரதேசங்களிலும் எரிசக்தி திட்டம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.