வட கிழக்கெங்கும் மாவீரர் வாரம் உணர்ச்சிபூர்வமாக ஆரம்பமானது

யாழ். பல்கலை

மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது.

 

விசுவமடு

விசுவமடு பகுதியில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இன்றைய தினம் முல்லைத்துவு மாவட்டத்திற்குட்பட்ட விசுவமடு பகுதியில் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வானது விசுவமடு தொட்டியடி பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட அமைவிடத்தில் இடம்பெற்றது.

 

பருத்தித்துறை

பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று(நவ 21) காலை 9:30 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடாத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை இரண்டு மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்துடன் மாவீர்களுக்கு அக வணக்கம் இடம் பெற்றதை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றிலிருந்து எதிர்வரும் 27 ம் திகதிவரை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

 

கஞ்சிக்குடிச்சாறு

கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் கட்சி பேதமின்றி வழமை போன்று முன்னாள் போராளிகளின் தலைமையிலேயே மாவீரர் தின நிகழ்வு முன்னெடுக்கப்படும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என முன்னாள் போராளியான நாகமணி கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின முன்னேற்பாட்டின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவீரர் தின ஏற்பாடுகளுக்காக மாவீரர் துயிலுமில்லம் துப்பரவுப் பணிகளை கட்சி பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றார்கள். நாங்கள் வழமை போன்று இதனை முன்னாள் போராளிகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.