மீனவர்களுக்காக சபையின் நடுவில் அமர்ந்து திலிப் வெத ஆராய்ச்சி போராட்டம்!

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராய்ச்சி இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போது, சபையின் நடுவில் அமர்ந்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இலங்கையில் மீன்பிடித் தொழில் அழிந்துவிட்டது என்றும் உடனடி நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றம் முடியும் வரை இவ்வாறு அமர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் சிறிது நேரத்தின் பின்னர் அவர் சபையைவிட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.